
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக தரப்பில் 20 லட்சம் ரூபாய் பணம் வங்கி கணக்கில் இழப்பீடு வழங்கப்பட்டது.
கரூரில் விஜய் பங்கேற்ற த.வெ.க. பரப்புரைக் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயரிழிந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் நேற்று தலா 20 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதுகுறித்து தவெக தலைவர் விஜய் பேசியபோது, கரூர் மக்களை சந்திக்க சட்டரீதியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாகச் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய விஜய், தவெக அறிவித்தபடி குடும்பநல நிதியாக 20 லட்சம் ரூபாயை தமது உதவிக்கரமாக ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வினால் குடும்ப உறவுகளை இழந்து தவிப்பவர்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்றும் இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம் என்றும் தெரிவித்துள்ளார்.




