
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறந்ததை ஒட்டி உத்திரமேரூரில் தேமுதிக வினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பஜார் வீதி வழியாக ஊர்வலமாக வந்து பேருந்து நிலையத்தில் விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவரும், முன்னாள் எதிர் கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரி இல்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து தேமுதிக வினர் மட்டுமில்லாமல் அரசியல் கட்சியினர், திரை உலகத்தினர் உட்பட பல்வேறு தரப்பினர் விஜயகாந்த் உடலுக்கு இரங்கல் தெரிவித்தும், அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் அழிசூர் கன்னியப்பன் தலைமையிலும், பேரூர் கழக செயலாளர் ஐயப்பன் முன்னிலையிலும் தேமுதிக வினர் ஏராளமானோர் அம்பேத்கர் சிலை அருகிலிருந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பஜார் வீதி வழியாகப் பேருந்து நிலையம்வரை ஊர்வலமாக வந்து விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

