
தேமுதிக இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேமுதிக பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. இது விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு நடைபெறும் தேமுதிகவின் முதல் பொதுக்குழு கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், அணி துணை செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர்.இந்த நிலையில் தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், இளைஞர் அணி செயலாளராக வி.விஜய பிரபாகர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு கட்சி நிர்வாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சி பெற பாடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவின் இளைஞர்அணி செயலாளராக இருந்து வந்த எல்.கே.சுதீஷ் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேமுதிக அவைத்தலைவர் வி.இளங்கோவன், தேமுதிக தலைமை நிலையச் செயலாளராக பார்த்தசாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இன்று பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.



