
தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கப்பட்டுள்ளது. இன்று புதிதாக 23 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் மே பத்தாம் நாள் ஆட்சியமைத்தது. முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் ஒன்பது பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் அமைச்சரவையை விரிவாக்கி அதில் 23 பேரைச் சேர்த்துக்கொள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் பரிந்துரைத்ததற்குத் தமிழ்நாடு ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் ஒப்புதல் அளித்தார்.
அதன்படி பதவியேற்பு விழா இன்று சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத், அவிநாசி சட்டமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ரஞ்சித்குமார், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் வினோத், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜ், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மதன்ராஜா, இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரி ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவியேற்பு உறுதிமொழியும் இரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.
கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், ஈரோடு கிழக்குத் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் விஜய் பாலாஜி, இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், சேலம் தெற்குச் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தமிழன் பார்த்திபன், திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாதன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் குமார், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு, கோவை வடக்குச் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் முகமது பர்வேஸ், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார், இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினர் மரியவில்சன், கிணத்துக்கடவு சட்டன்ற உறுப்பினர் விக்னேஷ் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவியேற்பு உறுதிமொழியும் இரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.
இன்று பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகிய இருவரும் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் ஆவர்.



