
26 வட மாநில தொழிலாளர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு. கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி சிப்காட் தொழில் பூங்காவில் டெல்டா என்கிற தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரியில் உள்ள சிக்கன் ரைஸ் கடையிலிருந்து வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிக்கன் ரைஸ் வாங்கி வந்து பணி செய்யும் இடத்தில் வைத்துச் சாப்பிட்டனர். சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாகச் சிக்கன் ரைஸ் கடையிலிருந்து உணவுப் பொருட்களைக் கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.
மேலும் சிக்கன் ரைஸ் கடை உரிமையாளர்மீது குருபரபள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


