Advertisements

கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே மரணம் நிகழ்ந்ததாகவும் அதனை முதன் முதலாக பார்த்த ஆதவ் அர்ஜுனா கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும், இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜயும் பார்த்தும் பார்க்காதது மாதிரி இருந்த வீடியோ ஒன்று வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி அன்று நடிகர் விஜய் பங்கேற்ற தமிழக வெற்றி கழக பொதுக்கூட்டத்தில் மிகப்பெரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 13 ஆண்கள் 18 பெண்கள் 10 குழந்தைகள் உட்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர் .
ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது . இந்த நிகழ்வு குறித்து மாநில அரசின் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில் தற்பொழுது , சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது .
அக்டோபர் 18ஆம் தேதி சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது . இந்த விசாரணையின் ஒரு பகுதியாக சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் முகேஷ் குமார், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தார். இதன் அடிப்படையில் சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் போட்டோகிராபர் கடை உரிமையாளர்கள் என பலர் சிபிஐ வசம் தங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர் .
முன்னதாக இந்த சம்பவம் குறித்து தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் பொதுச் செயலாளர் புசி ஆனந்த் மற்றும் நிர்வாகி நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மீதும் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்ற குரலும் எதிரொலித்து வருகிறது.
கரூரில் தற்பொழுது சிபிஐ அதிகாரிகள் பிரத்தியேக உடை அணிந்து கேமரா அளவீட்டு கருவிகள் ஆகியவற்றுடன் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள் டிஜிட்டல் சர்வே எந்திரம் மூலம் சாலை பகுதியும் அளவீடு செய்யப்பட்டு வருகிறது
இந்த நிலையில் சம்பவத்துக்கு காரணம் விஜய் தரப்பு தான் என ஏராளமான தகவல்கள் சிபிஐ வசம் சொல்லப்பட்டிருப்பதாக தெரிகிறது .
அரசு தரப்பில் விசாரணை நடத்திய போது கரூர் சாலை பேரணிக்கான அனுமதியை கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் பல பகுதிகளை குறிப்பிட்டு கேட்டிருந்தார். கரூரில் உள்ள லைட் ஹவுஸ் கார்னர் அல்லது உழவர் சந்தை பகுதியில் கூட்டம் நடத்த கேட்டிருந்தார் .இவையெல்லாம் பாதுகாப்பு கருதி மறுக்கப்பட்டன. இதன் பின்னர் வேலுச்சாமிபுரத்தில் நிகழ்ச்சி நடத்த அவர் கொடுத்த மனு ஏற்கப்பட்டு 11 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
சுமார் பத்தாயிரம் பேர் கூட்டத்துக்கு வருவார்கள் என்று சொன்ன நிலையில் அந்த மனுவின் அடிப்படையில் மொத்தம் 606 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கரூரில் கூட்டம் நடத்துவதற்கு மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி கேட்ட நிலையில் செய்தியாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு விஜய் வருவதாக கட்சியின் பொதுச்செயலாளர் புசி ஆனந்த் தெரிவித்திருந்தார்.
இதனால் 10 மணி முதல் அங்கு கூட்டம் திரள தொடங்கிவிட்டது . நடிகர் விஜய் இரவு 7:00 மணிக்கு கரூர் வந்த நிலையில் காலதாமதத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது .மேலும் அவரது கேரவன் வாகனத்திற்கு பின்பாகவும் ஏராளமான பேர் திரண்டு வந்தார்கள். கேரவன் கதவை மூடிக்கொண்டு அவர் உள்ளே இருந்ததால் பார்க்க முடியாத பலரும் பின் தொடர்ந்து வந்தனர்.
இதற்கிடையே முன்னதாக உள்ள அக்ஷயா மருத்துவமனை அருகே நிறுத்திப் பேசும்படி காவல் துறையினர் அறிவுறுத்திய போதிலும் அதனை கேட்காமல் வேலுச்சாமிபுரத்தில் தான் பேசுவேன் என்று அடம் பிடித்து விட்டனர் . காவல்துறையினர் பலமுறை பிரச்சார வாகனத்தை நிறுத்தும்படி கேட்டும் யாரும் கேட்கவில்லை.
அட்சயா மருத்துவமனையில் இருந்து 35 மீட்டர் தூரம் சென்றபோது இருபுறமும் இருந்த கூட்டத்தினரை நிலை குலையச் செய்தது . இதனால் மிகுந்த அலை மோதல் ஏற்பட்டு பீதி மூச்சுத் திணறல் மயக்கம் நெரிசல் ஏற்பட்டது பலரும் கீழே விழுந்து மிதிபட்டு இருக்கிறார்கள் .
இதே இடத்தில் அதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சாலை பேரணியும் நடந்தது. ஆனால் அதில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது . இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பாக புதிய வீடியோ ஒன்று சிபிஐ வசம் ஒப் படைக்கப்பட்டதாக தெரிகிறது .
அந்த வீடியோவில் நடிகர் விஜய் சம்பவ இடத்திற்கு வந்ததும் தனது கையில் உள்ள காகிதத்தை எடுத்து படிக்கத் தொடங்குகிறார் அந்த சமயத்தில் வலது பக்கமாக இருந்த கூட்டத்திலிருந்து சிலர் கூக்குரலிட்டு கையை உயர்த்தி கவனத்தை ஈர்க்கிறார்கள். அந்த இடத்தில் ஒரு பெண் மயங்கி விழுந்து கிடக்கிறார். ஒரு குழந்தையும் கீழே விழுந்து கிடக்கிறது.அந்தப் பெண்ணை பாருங்கள் என்று கூச்சலிடுகிறார்கள்.
இந்த சமயத்தில் ஆதவ் அர்ஜுனா கேரவன் வாகனத்தின் உள்புறமாக அமர்ந்திருந்தார். என்ன நடந்தது என்பது தெரிவதற்காக அவர் வெளியே எட்டிப் பார்க்கிறார். அப்பொழுது அவரைப் பார்த்து இங்கே பாருங்கள் இங்கே பாருங்கள் என சத்தமிட்டு பெண்களும் ஆண்களும் ஓலமிடுகிறார்கள் .
இதனை அடுத்து விஜய் இடம் தகவல் சொல்வதற்காக அவர் கேரவன் உச்ச பகுதிக்கு சென்று தகவல் செல்ல முயல்கிறார் ஆனால் அந்த சமயத்தில் விஜய் தனது பேச்சை தொடங்க ஆரம்பித்து விட்டார். இதனால் அந்த பேச்சை இடைமறிக்க முடியாது என்று நினைத்து ஆதவ் அர்ஜுனா அமைதியாகி விடுகிறார். இதன் பின்னரும் தொடர்ந்து கூப்பாடு எதிரொலிக்கிறது. இதனை அடுத்து ஆதவ் அர்ஜுனா கீழே குனிந்து என்ன நடந்தது என்று கேட்கிறார். அப்பொழுது கீழே விழுந்து கிடப்பதாக தகவல் சொல்லப்படுகிறது.
இதனைக் கேட்ட ஆதவ் அர்ஜுனா மீண்டும் விஜய்யிடம் சொல்ல முயல்கிறார் ஆனால் விஜய் பேசிக் கொண்டே இருக்கிறார். இதனால் அவரால் தகவல் சொல்ல முடியவில்லை விஜய் பேசி முடித்ததும் தகவல் சொல்கிறார் . ஆனால் விஜய் காதில் ஏதோ குழந்தையை காணவில்லை என்று கேட்கிறது. இதனால் ஏதோ குழந்தை காணவில்லை என்று அவர் மைக்கில் சொல்லிவிட்டு கீழே இறங்குகிறார்.
இந்த சமயத்திலேயே அங்கு ஏராளமான பேர் இறந்த தகவல் அவருக்கு எட்டுகிறது இதனைத் தொடர்ந்து அவர் கேரவனை வேகமாக எடுத்துச் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது . தற்பொழுது வெளிவந்துள்ள இந்த வீடியோவால் நடிகர் விஜய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தவிர சிபிஐ இடம் வாக்குமூலம் அளித்த பலரும் விஜய் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். அவர் கேரவனில் வந்த போது வெளியே எட்டிப் பார்த்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது . அது மட்டுமல்லாமல் காலையிலேயே அவர் வந்திருந்தாலும் இந்த சம்பவம் நடந்திருக்காது என்று குறிப்பிட்டுள்ளனர்.
கரூர் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது . தற்போதைய சூழ்நிலையில் நடிகர் விஜய்க்கு எதிரான தகவல்கள் சிபிஐ வசம் சென்றடைந்துள்ளன என்பது புதிய செய்தியாகும்.
Advertisements




