
நெல்லை:
நெல்லை மாநகர தி.மு.க.வுக்கு உட்பட்ட பாளை பகுதி சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பாளை ஜோதிபுரம் திடலில் நடைபெற்றது. இதில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் ஆட்சி செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 ஆண்டுகளில் 40 ஆண்டுகால சாதனையைச் செய்து முடித்துள்ளார். மகளிருக்கு உரிமைத் தொகை உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்.
நேற்று முளைத்தவர் எல்லாம் தி.மு.க.வுக்கு சவால் விடுகிறார்கள். அவரது அப்பாவையும் நாங்கள் தான் அறிமுகம் செய்தோம். நாடாகமாடுவதில் தி.மு.க. கைத்தேர்ந்தவர்கள் என நேற்று முளைத்தவரெல்லாம் சொல்கிறார். அவரும் ஒரு நடிகர் என்பதை மறக்கக் கூடாது.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சமாதி கட்டி கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்பதை மறக்கக் கூடாது. வாரம் ஒரு முறை தமிழகத்தின் ஊர் ஊராக வந்து மோடி பொய்யாகப் பேசிச் சென்றார்.
அனைத்தையும் சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதற்கு மகளிர் தான் காரணம். எம்.ஜி.ஆருக்கு ஏஜெண்டாகத் தேர்தலில் செயல்பட்டவன் நான்.
எம்.ஜி.ஆர். பிரசாரத்திற்கு சாலையில் சென்றால் கூட்டம் புற்றீசல் போல் சாரை சாரையாக வந்துவிடும். எம்.ஜி.ஆருக்கு வந்தது போல் இப்போது மு.க. ஸ்டாலினுக்கு கூட்டம் அதிகமாக வருகிறது.
பாராளுமன்ற தேர்தலில் ஆண்கள் வாக்குகளைவிட பெண்கள் வாக்குகள் தான் அதிகமாகத் தி.மு.க.வுக்கு வந்தது. பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் 100-க்கு 90 வாக்கு தி.மு.க.வுக்கு கிடைத்தது.
மக்களுக்கான ஆதரவை தாங்கிக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் எடப்பாடி பழனிசாமி பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையெனப் பேசுகிறார்.
தமிழகத்தின் இளைஞர்களைச் சீமான் ஏமாற்றுகிறார். சட்டப்படி நாம் தமிழர் என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது. நான் நீதிமன்றத்தை நாடினால் அந்தப் பெயரையே இனி சீமான் பயன்படுத்த முடியாது.
பிரபாகரன் படத்தை ஒட்டிவைத்து சீமான் போர்ஜரி செய்து வருகிறார். விடுதலை புலிகள் பிரபாகரன் சீடர்கள் 48 பேர் ஜாமீன் மீதான வழக்கில் நான் ஆஜராகி காப்பாற்றிய கட்சி தி.மு.க. என்பதை சீமான் மறக்கக் கூடாது.
பிரபாகரனையும், விடுதலை புலிகளையும் காப்பாற்றியது தி.மு.க. மற்ற கட்சிகள் எல்லாம் பிரபாகரனை வைத்துப் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலைய பிரச்சனையில் ஒரு நடிகர் நேற்று நாடகம் ஒன்றை ஆடினார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வீட்டுக்காகவா விமான நிலையம் கேட்கிறார்.
தூத்துக்குடி விமான நிலையத்தை மதுரைக்கு நிகராகக் கனிமொழி எம்.பி. முயற்சியால் மாற்றியுள்ளார். பரந்தூர் விமான நிலையத்திற்கு இடம் கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர்.
விமான நிலைய பிரச்சினைகுறித்து முன் பின் விசாரிக்காமல் விஜய் பேசுகிறார். பரந்தூரில் விஜய் வியாபாரம் செய்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் பரந்தூர் பகுதியில் 443 பேர் வாக்களித்ததில் 51 சதவீதம் தி.மு.க.வுக்கு தான் விழுந்துள்ளது. இதில் தி.மு.க.வை அப்பகுதி மக்கள் விரும்புகிறார்கள் என்பதே அர்த்தம்.
பரந்தூர் பகுதி வாக்குசாவடியில் அனைத்து கட்சிகளைவிட தி.மு.க.விற்கு தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.
