
நாவலூர் சுங்கச்சாவடி கட்டணம் நாளை முதல் ரத்து!
தென்சென்னை பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு: ‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப்பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில், நேற்று செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள்குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு செல்லும் வழியில், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், திருமுடிவாக்கம் தொழில்துறை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, தொழில் முனைவோர்கள் கூட்டமைப்பு, குடியிருப்பு நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, மகளிர் சுயஉதவி குழுக்கள், குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் 4 மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள்குறித்த ஆய்வுக் கூட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலைத் தொடங்கினார். இந்த ஆய்வு கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்தக் கூட்டத்தில் 28 துறைகளைச் சேர்ந்த மாவட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டம் மறைமலைநகரில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 4 மாவட்டங்களும் பருவமழையை எதிகொள்ள தயாராக இருக்கிறதா என்றும், அரசின் பல்வேறு திட்டங்களின் நிலை குறித்தும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைதொடர்ந்து, இந்த ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் திட்டங்கள் குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். தென்சென்னை பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நாளை முதல் ரத்து செய்யப்படுகிறது என்றார்.



