
வருகிற சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் சவால் விடுத்திருக்கிறார்.. அதே சமயம் , திமுக கூட்டணியில் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி இணைவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் .
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் அதிமுக அல்லது காங்கிரஸ் கட்சி கூட்டணி இணையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் , அதிமுக தரப்பில் கூட்டணி இல்லை என்று முடிவாகிவிட்டது. அதே சமயம் காங்கிரஸ் சார்பில் திரை மறைவில் இன்னும் இழுபறி வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன .
இந்த நிலையில் , மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் பேசிய பேச்சு மிகவும் பரபரப்பாக பார்க்கப்படுகிறது . அவர் பேசும்போது நமக்காக உண்மையுடன் உழைக்கும் யாராவது வர மாட்டார்களா என மக்கள் ஒரு விதமான மன அழுத்தத்தில் இருக்கிற நேரம் இது… மாற்றி மாற்றி ஓட்டு போட்டு ஏமாந்தவங்க இப்போ நம்மளை நம்புறாங்க .
நம்மை நம்புகிறவர்களுக்கு நாம் நம்பிக்கையோடு இருக்கணும். தேர்தல் கூட்டணி பற்றி எல்லாம் நிறைய ஜோசியங்கள் நடந்துகிட்டு இருக்கு . இந்த விஜய் இப்போதுதான் வந்திருக்காரு. இவர்கூட யார் வரப் போறாங்க . அப்படி இப்படின்னு அண்டர் எஸ்டிமேட் பண்ணிக்கிட்டு இருக்காங்க . இதெல்லாம் நமக்கு புதுசு இல்ல நம்மள முப்பது வருஷமா அண்டர் எஸ்டிமேட் பண்ணிக்கிட்டு தான் இருக்காங்க . ஆனா மக்கள் கரெக்ட்டா தான் நம்மள எஸ்டிமேட் பண்ணி ஒரு இடத்தை கொடுத்து இருக்காங்க.
என் கேரியரின் உச்சமான ஒரு இடத்தை கொடுத்திருக்காங்க அத இந்த நாடு பார்த்துகிட்டு இருக்கு . ஒன்னு மட்டும் உறுதியா சொல்றேன் இந்த விஜய் ஊழல் செய்யவே மாட்டான் ஒரு பைசா தொட மாட்டான் எனக்கு அது அவசியமே இல்லை. தீய சக்தியாக இருக்கட்டும் அல்லது ஊழல் சக்தியாக இருக்கட்டும் இரண்டு பேரும் தமிழ்நாட்டை ஆளவே கூடாது .
எல்லோரும் உண்மையா உழைக்கணும் யாருக்காகவும் எதற்காகவும் நம்முடைய அரசியலை காம்ப்ரமைஸ் பண்ணிக்க கூடாது . நம்ம மக்கள் கண்டிப்பாக ஓட்டு போட்டு நம்மள ஜெயிக்க வைப்பாங்க . அதுல எந்த மாற்று கருத்தும் இல்லை . எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டுல இரண்டே கால் கோடி ரேஷன் கார்டு இருக்கும்னு நினைக்கிறேன். அவங்க எல்லாம் எந்த கட்சியில் இருந்தாலும் கட்சி வேறுபாடு தாண்டி இந்த விஜய் அவங்க வீட்ல ஒருத்தனா வாழ்ந்துட்டு இருக்கான் . அவங்க என்னை குடும்பத்துல ஒருத்தன பார்த்துகிட்டு இருக்காங்க .
அதனால எல்லாத்தையும் தாண்டி இந்த விஜய் கூட நிக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்க. அப்படிப்பட்ட வங்களை நம்ம விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வையுங்க . இப்ப நடக்க போறது வெறும் தேர்தல் இல்ல இது ஒரு ஜனநாயகப் போர் . நம்மளுடைய TVK படை மிகப் பலம் வாய்ந்த படை . நட்பு, சக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனியாகவும் நின்று ஜெயிக்கும் அளவுக்கு கெத்தான படை அதுலையும் ரொம்ப முக்கியமா பெண்கள் நிறைந்த படை நம்ம கூட இருக்காங்க.
அந்த பெண்கள் படையை பார்த்து தான் அரசியல் அரங்கமே அதிர்ந்து போய் இருக்கிறது. தமிழக வெற்றி கழகம் பற்றி கணிக்க முடியலன்னு சொல்றாங்க. ஆனால் மக்கள் ஏற்கனவே கணிச்சு முடிச்சுட்டாங்க. அதனால இந்த தேர்தலுக்குப் பிறகு தீய சக்தியும் ஊழல் சக்தியும் இந்த நாட்டில் இருக்காது . அதனால் என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே தோழிகளே உங்களோடு நான் இருக்கிறேன். நம்மோடு நம்ம மக்கள் இருக்கிறாங்க. இதுக்கு மேல என்ன வேண்டும் கான்ஃபிடன்ட்டா இருங்க நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் இவ்வாறு அவர் பேசினார் .
நடிகர் விஜய் பேச்சு மூலம் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடும் என பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது . இதே சமயத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியை திமுகவுடன் இணைப்பது குறித்து மு க ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர் .
இது தொடர்பாக , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனை சமாதானம் செய்துவிடலாம் என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் , பாட்டாளி மக்கள் கட்சியை திமுகவில் இணைப்பது குறித்து தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பரபரப்பு தகவல் தெரிவித்திருக்கிறார் .
நாங்கள் 2011 ஆம் ஆண்டே பாமக உடன் கூட்டணி கிடையாது என்ற முடிவை எடுத்து விட்டோம் . அதில் எந்த மாற்றமும் கிடையாது . பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எங்களுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. பாட்டாளி மக்கள் கட்சியை திமுகவில் இணைக்க வேண்டுமானால் அது அந்த கட்சியே முடிவெடுத்துக் கொள்ளலாம் . அதில் நாங்கள் தலையிடப்போவதில்லை.
ஆனால் , அதே சமயம் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம் என தொல் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார் .அதாவது , மருத்துவர் ராமதாசை திமுகவில் இணைத்தால் நாங்கள் திமுக கூட்டணியில் இருக்க மாட்டோம் என்பதை தொல் திருமாவளவன் மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார் .
அவரது இந்த கருத்தால் மருத்துவர் ராமதாசை திமுகவில் இணைப்பது குறித்து இழுபறி நீடித்து வருகிறது என்பதும் முக்கிய செய்தியாகும் …


