ஈரானில் வெடித்த குண்டு மழை..மரண பயத்தில் இருக்கிறோம்.! ஈரானின் மனக்குமுறல்.!

Advertisements

“எப்போது வேண்டுமானாலும் குண்டு விழலாம், போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே உடல் வெடித்துச் சிதறலாம் என்ற மரண பயத்துடன் நீங்கள் எப்போதாவது வாழ்ந்திருக்கிறீர்களா?” என்று அமெரிக்கத் தூதரிடம் ஈரான் அமைச்சர் உருக்கமாகவும் ஆவேசமாகவும் எழுப்பிய கேள்விகள் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. மறுபுறம், களத்தில் அமெரிக்க வீரர் கொல்லப்பட்டதால் உச்சகட்டக் கோபமடைந்த டிரம்ப் ஈரான் மீது குண்டு மழையைப் பொழிய உத்தரவிட, அடுத்தடுத்த வான்வழித் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்த பதற்றமான சூழலில், ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்த பின்னணி தகவல்களை தற்பொழுது விரிவாக பார்க்கலாம்.!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப்பிடம் ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி ஒரு உணர்ச்சிகரமான மற்றும் சிந்திக்க வைக்கும் கேள்வியை முன்வைத்தார்.

அது என்னவென்றால், “மரண பயத்துடன் நீங்கள் எப்போதாவது பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறீர்களா? எப்போது வேண்டுமானாலும் குண்டுவீச்சு நடக்கலாம், பேச்சுவார்த்தையில் கலந்துகொள்பவர்கள் மொத்தமாக உயிரை பலிகொடுக்கலாம், அல்லது செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே உடல் வெடித்துச் சிதறலாம் என்ற பதற்றமான மனநிலையில் நீங்களாவது இருந்து இருக்கிறீர்களா? தொலைபேசியில் உங்கள் குடும்பத்தினரிடம் பேசும்போது இதுவே கடைசி உரையாடலாக இருக்கலாம் என்று நினைத்து பேசிய தருணம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று தனது நாட்டு மக்கள் தினசரி எதிர்கொள்ளும் வலியை விரிவாக விவரித்தார்.

தங்களுக்குத் தொடர்ந்து இதுபோன்ற கடுமையான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் இருந்தாலும், எங்களின் கொள்கை உறுதியிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும், பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார் என்றாலும் எங்களை மிரட்டவோ அல்லது லஞ்சம் கொடுத்து பணிய வைக்கவோ யாராலும் முடியாது என்றும் அவர் மிகத் தெளிவாகத் தெரிவித்தார்.

மேலும் , அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானை தொடர்ந்து தாக்கி வருவதால், அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஈரானிய மக்களின் வலியை எடுத்துரைக்கும் வகையில் இந்த கலந்துரையாடல் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.. இவ்வாறான தூதரகப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கள நிலவரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. வடக்கு ஈராக்கில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையின் போது அமெரிக்க வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்தார்.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இரு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில், ஜூலை 18ஆம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரானின் வெடிக்காத ட்ரோனைச் செயலிழக்கச் செய்யும் பணியின்போது மேலும் ஒரு வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் கடந்த ஐந்து மாத கால மோதலில் பலியான அமெரிக்க ராணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.

இந்தத் தொடர் உயிரிழப்புகளால் உச்சகட்டக் கோபமடைந்த டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை உடனடியாகத் தீவிரப்படுத்துமாறு அதிரடியாக உத்தரவிட்டார். அடுத்த சில நொடிகளில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானின் பல்வேறு ராணுவ முகாம்களைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது.

தென்கிழக்கு துறைமுக நகரான சாபஹார், கோனாரக் மற்றும் வடமேற்கு ஈரானிலுள்ள தப்ரிஸ் போன்ற பல முக்கியப் பகுதிகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டன. இந்தத் தீவிர மோதலால் ஹார்முஸ் கடல்வழிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கிடுகிடுவென உயர்ந்து தற்போது பேரலுக்கு 85 டாலராக வர்த்தகமாகி வருகிறது. போர் மேலும் நீடித்தால் விலை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

இதற்கிடையே, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம் தன் நாட்டு குடிமக்களுக்கு அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. இந்த போர்ச் சூழல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈரானில் வசிக்கும் மற்றும் அங்கு செல்லத் திட்டமிட்டிருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு அதிரடியான மற்றும் மிக முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

ஈரான் முழுவதும் வன்முறை மற்றும் நிலையற்ற தன்மை அதிகரித்து வருவதால், இந்தியர்கள் யாரும் தற்பொழுது ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்றும், ஏற்கனவே அங்கு தங்கியிருப்பவர்கள் பாதுகாப்புக் கருதி உடனடியாகத் தற்காலிகமாக வெளியேற வேண்டும் என்றும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஈரானிலேயே தொடர்ந்து தங்குவதற்குத் தள்ளப்பட்டவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், குறிப்பாக ராணுவ நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் தெற்கு கடற்கரை பகுதிகளைத் முற்றிலுமாகத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் தங்களைப் பதிவு செய்துகொண்டு, உள்ளூர் செய்திகளையும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் உன்னிப்பாகக் கவனித்து வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் , ஒருபுறம் மரண பயத்தை எதிர்கொள்ளும் நாடுகளின் தூதரகப் போரும், மறுபுறம் அதிபர் டிரம்ப்பின் உத்தரவால் நள்ளிரவில் வெடிக்கும் குண்டு மழையும் உலக அரசியலை மீண்டும் ஒரு அச்சுறுத்தலான கட்டத்திற்குத் தள்ளியுள்ளன.

கச்சா எண்ணெய் விலை உயர்வு முதல் வளைகுடா நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டினரின் பாதுகாப்பு வரை இந்த மோதல் பல விளிம்புநிலைச் சிக்கல்களை உருவாக்கியுள்ளது. ஈரானில் நிலவும் இந்த நிலையற்ற சூழலும், இந்திய தூதரகத்தின் அவசர எச்சரிக்கையும் மத்திய கிழக்கு பிராந்தியம் எதிர்கொள்ளவிருக்கும் பேராபத்தை உணர்த்துகின்றன. இந்த பதற்றமான சூழ்நிலை அடுத்தடுத்து எத்தகைய உலகளாவிய தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *