கரூரில் தமிழக வெற்றிக் கழகப் பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர்உயிரிழந்த வழக்கில், அக்கட்சியின் தலைவர் விஜய் தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகளின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டபோது நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் கரூருக்கு வந்து நிகழ்விடத்தைப் பார்த்ததுடன் பொதுமக்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரித்தனர்.
இதேபோல் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் விசாரணை நடத்தியதுடன், விஜயின் பேருந்தில் இருந்த கேமராவில் பதிவான காட்சிப்பதிவுகளை எடுத்துச் சென்றனர்.
தில்லியில் ஏற்கெனவே புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் ஜனவரி 12ஆம் நாள் விசாரணைக்கு வர வேண்டும் என்று சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதன்படி இன்று தில்லி சிபிஐ அலுவலகத்துக்குச் சென்ற விஜயிடம் அதிகாரிகள் அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பினர். அவர் அதற்குப் பொறுமையாகப் பதிலளித்தார்.



