
அண்ணாமலை மீண்டும் மும்பைக்கு வந்தால் அவரைத் தாக்கப்போவதாக ராஜ் தாக்கரே கூறியுள்ள நிலையில், தான் மீண்டும் வரப்போவதாகவும் அவர்கள் தாக்கட்டும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை மும்பையில் பாஜக கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழ், இந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளில் பேசினார். அப்போது மும்பை மகாராஷ்டிரத் தலைநகர் மட்டுமல்ல, அது இந்தியாவின் நிதித் தலைநகரம், பன்னாட்டு நகரம் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் மும்பையில் சிவசேனா, நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகளின் கூட்டுக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரேயும் ஆதித்ய தாக்கரேயும் பேசினர். அப்போது, இனி அண்ணாமலை மும்பைக்கு வந்தால் அவர் காலை வெட்டுவோம் என்றும், மும்பையில் உள்ள தமிழர்களை அடித்து விரட்டுவோம் என்றும் வெறுப்புடன் பேசினர்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் இன்று சென்னையில் பேசிய அண்ணாமலை, உழவரின் மகனான தான் துணிச்சலுடனேயே மும்பைக்குச் சென்று வந்ததாகவும், அந்தத் துணிச்சல் இல்லாவிட்டால் சொந்த ஊரிலேயே இருக்க வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.
தாக்கரேக்களின் அச்சுறுத்தலுக்கெல்லாம் அஞ்சுபவன் தானில்லை என்றும், மீண்டும் மும்பைக்குச் செல்லப்போவதாகவும் அப்போது தாக்கரேக்கள் வரட்டும் என்றும் பேசினார்.
மும்பை ஒரு பன்னாட்டு நகரம் என்று தான் கூறியதற்கு, அது மராத்தியர்களால் கட்டமைக்கப்பட்டது இல்லை என்று பொருளில்லை என்றும் அண்ணாமலை கூறினார்.



