நாடாளுமன்றத்தில் உச்சக்கட்ட மோதல்..!

இந்தியாவின் நலனை விட்டுக்கொடுக்க அமெரிக்காவுடன் பிரதமர் மோடி சமரசம் செய்துகொண்டதாகக் கூறி எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டதையடுத்து மக்களவை நண்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியைப் பேச அனுமதிக்காததைக் கண்டித்து நேற்றுக் காங்கிரஸ் கட்சியினர் அவையின் நடுப்பகுதிக்குச் சென்று தாள்களைக் கிழித்தெறிந்தனர். இதையடுத்து மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உள்ளிட்ட எட்டுப்பேரை இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்றும் அவை தொடங்கியதும், அமெரிக்காவுடன் செய்துகொண்ட வணிக உடன்பாடு குறித்துப் பேச வேண்டும் என்றும், இதில் பிரதமர் சமரசம் செய்துகொண்டார் என்றும் கூறி எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளுங்கட்சியினரும் முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் நிலவிய நிலையில் நண்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் , பிரதமர் சமரசம் செய்துகொண்டார் என்று எழுதப்பட்ட பதாகையுடன் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய இணையமைச்சர் ரன்வீத் சிங் பிட்டு அவர்களைக் கடந்து உள்ளே சென்றார். அவருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே சொற்போர் நடந்தது.

இதனிடையே அமெரிக்க வேளாண் விளைபொருட்களுக்கு இந்தியாவில் இறக்குமதி வரி விலக்கு அளிப்பதைக் கண்டித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆம் ஆத்மிக் கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *