பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம் – இடைத்தேர்தலில் தமிழக விவசாயிகள் தவெகவுக்கு எதிராக பிரசாரம்!

பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என குற்றம்சாட்டி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக வரவிருக்கும் இடைத்தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்படும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலின்போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்கள் அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், பெரு விவசாயிகளின் கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தவெக வாக்குறுதி அளித்ததாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும், இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், தமிழகத்தில் வறட்சி நிலவும் சூழலில், பாகுபாடின்றி அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு கண்டுகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் விவசாயிகளை ஒன்றுதிரட்டி தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால், இடைத்தேர்தலில் அதற்கான அரசியல் பதிலடி கொடுக்கப்படும் என்றும் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம், வரவிருக்கும் இடைத்தேர்தலில் முக்கியமான தேர்தல் பிரச்சாரப் பிரச்சினையாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *