தலைமைச் செயலகம் திட்டத்தை கைவிட வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்க தமிழக அரசு முன்மொழிந்துள்ள திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது மீனவ மக்களின் வாழ்வாதாரம், கடலோரச் சூழலியல், பொதுமக்களின் கடற்கரை அணுகல் மற்றும் அரசின் முக்கிய நிர்வாக நிறுவனத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்.

முல்லைக்குப்பம், சீனிவாசபுரம், ராஜீவ்காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜபுரம், டூமிங் குப்பம், நொச்சி நகர் மற்றும் நொச்சிக்குப்பம் உள்ளிட்ட 9 மீனவக் குடியிருப்புகள் இப்பகுதியைச் சுற்றி அமைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மீன்பிடித்தல், படகுகளை இயக்குதல், மீன் இறக்குதல், வலை மற்றும் மீன்களை உலர்த்துதல், மீன் விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமைச் செயலக வளாகத்துடன் சாலைகள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டால், 1,500-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் இடம்பெயரும் நிலை ஏற்படலாம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது. தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றம் அமைந்தால் உயர் பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டிய சூழல் உருவாகும் என்றும், இதனால் தடுப்புகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்து பொதுமக்களின் கடற்கரை அணுகல் பாதிக்கப்படலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புயல், கடல் எழுச்சி, வெள்ளம், கடலோர அரிப்பு மற்றும் கடல் மட்ட உயர்வு போன்ற இயற்கை பாதிப்புகளுக்கு சென்னை கடலோரப் பகுதிகள் ஏற்கனவே அதிகளவில் உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதி சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் மிக்க பகுதியாகவும், ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. நவீன நிர்வாகக் கட்டமைப்பு தேவையாக இருந்தாலும், அதற்காக உணர்திறன் மிக்க கடலோரப் பகுதியை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

எனவே, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கைவிட்டு, பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் சமூக ரீதியாகப் பொருத்தமான மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *