தவெக-வுக்கு மாநில கட்சி அங்கீகாரம் – தேர்தல் ஆணையம்!

தமிழக வெற்றிக்கழகம் சந்தித்த முதல் சட்டசபைத் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்திற்கு தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. அதேபோல், அக்கட்சியின் தேர்தல் சின்னமான விசில் சின்னத்திற்கும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 6-ல் இருந்து 7-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக ஆகியவை மாநில அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக இருந்த நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் தமிழக வெற்றிக்கழகமும் இணைந்துள்ளது.

இதனால் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படுவதில் சிக்கல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக-வின் தேர்தல் அரசியலில் இந்த அங்கீகாரம் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *