
ஓசூரில் அமையவிருந்த ரூ.15,803 கோடி மதிப்பிலான ஐந்தாம் தலைமுறை போர் விமான சோதனை மையம் ஆந்திர மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தமிழக தொழில்துறையில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் கைநழுவியது குறித்து மாநிலம் முழுவதும் பலத்த விவாதங்கள் எழுந்துள்ளன
இந்தியாவின் அதிநவீன 5-வது தலைமுறை போர் விமானங்களை தயாரித்து சோதனை செய்யும் பிரம்மாண்ட மையம் ஓசூரில் அமைக்க கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசும், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து பேச்சுவார்த்தைகளை தீவிரமாக நடத்தி வந்தன.
ஆனால், ஓசூரில் அமையவிருந்த இந்த மெகா ராணுவ ஆய்வு மற்றும் சோதனை மையம் தற்போது ஆந்திர பிரதேசத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் விஜயை டேக் செய்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது , “நாம் எதற்கு பயந்தோமோ அதுவே நடந்துவிட்டது.
இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நமது தமிழ்நாடு, ஆந்திராவை விட தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டது. எனினும், திட்டத்தை நாம் இழந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. எங்கள் முந்தைய ஆட்சியில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், இந்தத் திட்டத்தை எப்படியாவது ஓசூரில் கொண்டு வந்துவிட வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக DRDO அதிகாரிகளுடன் நாங்கள் இரவு பகலாக, தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம்.
இதற்காக 100 ஏக்கர் நிலத்தை முற்றிலும் இலவசமாகத் தர எங்கள் அரசு முன்வந்தது. அதுமட்டுமா? ஓசூர் விமான நிலையத்தில் 3.5 கி.மீ நீளத்திற்கு பிரம்மாண்ட ரன்வே அமைக்கவும் திட்டமிட்டோம். இது பெங்களூருவில் இருக்கும் விமான நிலையத்துக்கு மிக அருகில் அமைக்க வேண்டுமென்ற வியூகத்தையும் வகுத்திருந்தோம்.
அப்படியிருக்க, இடையில் என்ன நடந்தது? ‘அரசியல் காரணங்கள்’ என்று அப்பட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். என்ன அரசியல் காரணங்கள் வேண்டிக்கிடக்கிறது? தேசப் பாதுகாப்பு சார்ந்த மிக முக்கிய ராணுவ முதலீடுகளை, எப்படி நீங்கள் அரசியல் ஆதாயங்களின் அடிப்படையில் தீர்மானிக்க முடியும்? இந்த இடமாற்றம் என் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அப்பட்டமான அநீதி. நீங்கள் பேசும் கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்தின் நம்பகத்தன்மையை இது மொத்தமாகச் சிதைக்கிறது.
இந்த ஒரு திட்டத்துக்காக மட்டும் நான் தனிப்பட்ட முறையில் எத்தனை கூட்டங்களை நடத்தியிருக்கிறேன் தெரியுமா? என் ஒட்டுமொத்த டீமும் கடந்த 3 ஆண்டுகளாக இதற்காகக் ரத்தம் சிந்தி உழைத்திருக்கிறார்கள். இவ்வளவு முக்கியமான ஒரு திட்டம், இன்று நம் கையை விட்டுப் போவதைப் பார்க்கும்போது எனக்குத் தனிப்பட்ட முறையில் நெஞ்சு பொறுக்கவில்லை, பெரும் மனவேதனையாக இருக்கிறது!
இப்போது அவர்கள் தேர்வு செய்திருக்கும் ஆந்திராவின் புட்டபர்த்தி , நாங்கள் தமிழ்நாட்டில் தூக்கிக் கொடுத்த இடத்தை விட எந்த விதத்திலும் தொழில்நுட்ப ரீதியாகச் சிறந்தது இல்லை . மத்திய அரசு இதற்கு தமிழ்நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும், நீங்கள் விளக்கமளிக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.
ஒன்றை எல்லோரும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் கொள்கைத் தொடர்ச்சிக்கு பெயர் பெற்ற மாநிலம் இது. இப்படிப்பட்ட மிக முக்கியமான திட்டங்களில் ஆட்சி மாற்றம் ஒரு தடையாக இருக்கவே கூடாது. தற்போதைய அரசும் அதைத்தான் செய்யும் என்று நான் நம்புகிறேன். இந்த முக்கியமான தருணத்தில் தமிழ்நாடு ஒரு இன்ச் கூட தொய்வடைந்துவிடக் கூடாது.
இப்படிப்பட்ட முதலீடுகளைக் களத்தில் இறங்கி, ஆக்ரோஷமாகப் போராடிப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாட்டிற்கு உடனடியாக ஒரு சுறுசுறுப்பான, புத்தி கூர்மையுள்ள தொழில்துறை அமைச்சர் தேவை. நான் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்… நீங்கள் இந்த விவகாரத்தில் உடனடியாக, தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும். தமிழ்நாட்டின் புவியியல் இருப்பிடம், நம்மிடம் இருக்கும் மனித வளம் மற்றும் உள்கட்டமைப்புச் சிறப்புகளைப் பட்டியலிட்டு, உடனடியாகப் பிரதமர் அலுவலகத்திற்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் கடிதம் எழுத வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நாங்கள் விதைத்த வலுவான தொழில்துறைப் பணிகளை இந்த அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தமிழ்நாட்டிற்கு முறைப்படி சொந்தமாக வேண்டிய, நமக்குக் கிடைக்க வேண்டிய ஒவ்வொரு முதலீட்டிற்காகவும் நாம் இறுதிவரை போராட வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்னை தமிழக முதல்வர் விஜய் எதிர்கொள்ளப் போகும் மத்திய அரசு தொடர்பான முதுல் பிரச்னையாக இருக்கும். முதல்வர் விஜய் என்ன செய்ய போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.



