
கோவில்பட்டி அருகே பெண்ணையும் அவரது குழந்தையையும் அடித்துத் தொந்தரவு செய்த நபரைப் பெண்ணின் உறவினர் கொலை செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர், காமநாயக்கன்பட்டியில் ஜார்ஜ் நியூட்டன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், ராமச்சந்திரன் அப்பகுதியில் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதை கண்ட அப்பகுதி மக்கள் கொப்பம்பட்டி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன், உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து கொப்பம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், ராமச்சந்திரன் களக்காட்டில் வேலை பார்த்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த இசக்கியம்மாளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அவரது குழந்தைகளுடன் காமநாயக்கன்பட்டிக்கு அழைத்து வந்து தோட்டத்தில் தங்கியிருந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதில், இசக்கியம்மாளையும் அவரது குழந்தையும் ராமச்சந்திரன் அடித்து கொடுமைப் படுத்தியுள்ளார். இதுகுறித்து இசக்கியம்மாள் தனது உறவினரான சுந்தரபாண்டியன் என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சுந்தரபாண்டியன், இரவு காமநாயக்கன்பட்டிக்கு சென்று ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சுந்தரபாண்டியனை காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



