பொன்ராஜுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.. தமிழகம் முழுவதும் தவெகவினர் புகார்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியதாக முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகரும், அரசியல் விமர்சகருமான வி. பொன்ராஜுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் மற்றும் புகார்கள் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பின்னணியில் இருந்து கொண்டு பொன்ராஜ் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியுள்ளதாகக் கூறி, தவெக தலைவர் விஜய் நேடியாக சென்னை டிஜிபி அலுவலகத்திற்குச் சென்று புகார் மனு அளித்தார். தலைவர் விஜய்யின் அதிரடி புகாரைத் தொடர்ந்து, தவெக-வின் மகளிர் அணியினர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொன்ராஜை உடனடியாகக் கைது செய்யக் கோரி காவல் நிலையங்களில் திரண்டு புகார் அளித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர், ராணிப்பேட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்ட எஸ்பி அலுவலகங்களில் விடுக்கப்பட்டுள்ள புகார்களில், “பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், பொதுவெளியில் கலாச்சாரச் சீர்கேட்டை உருவாக்கும் வகையிலும் பேசிய பொன்ராஜ் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.விஜய்யின் புகாருக்குப் பதிலடி கொடுத்துள்ள பொன்ராஜ், தான் யாருக்கும் பயப்படப் போவதில்லை என்றும், மன்னிப்பு கேட்க முடியாது என்றும் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் மற்றும் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக ஆதரவாளர் என்று தவெகவினரால் விமர்சிக்கப்படும் பொன்ராஜுக்கு எதிரான இந்தச் சட்டப் போராட்டம், தவெக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாகக் காவல்துறை எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை என்ன என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *