கூட்டத்தில் சிக்கிய திருமாவளவன்..! திடீரென்று ஏற்பட்ட மூச்சு திணறல்..!

Advertisements
உளுந்தூர்பேட்டையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது.. இதில் பல்லாயிரக்கணக்கானோர்பங்கேற்றனர். மாநாட்டு மேடையிலும் பலர் ஏறிய நிலையில், மேடையில் பேசிக்கொண்டிருந்த திருமாவளவனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..இதனால் , மேடையில் இருந்த திரளான கூட்டமே  திகைத்து நின்று காணப்பட்டது.. இதன் பின்னனியில் என்ன நடந்தது.. விரிவாக பார்க்கலாம்..
உளுந்தூர்பேட்டை மண்ணில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற “தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு”, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் எழுச்சிமிகு வருகையால் மாநாட்டுத் திடல் விழாக்கோலம் போல காட்சியளித்தது.. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் அதிகாலை முதலே தொண்டர்கள் மாநாட்டுத் திடலில் குவியத் தொடங்கினர். கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் திரண்டதுடன், மாநாட்டுத் திடலும் சரி, வெளியேயும் சரி மனித கடலெனக் காட்சி அளித்தது.

மாநாட்டின் தொடக்கமாக, விசிக தலைவர் தொல். திருமாவளவன் தீபம் ஏந்தியபடி ரேம்ப் வாக் மூலம் மேடைக்கு வருகை தந்தார். அவரை வரவேற்கவும் பார்க்கவும் தொண்டர்கள் முந்தியடித்ததால், ஏராளமானோர் ரேம்ப் மீதும் மேடையிலும் திடீரென ஏறினர். இதனால் அங்கு ஆரம்பத்திலேயே ஒரு சிறிய பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், அனைவரையும் சமாளித்து திருமாவளவன் மேடை ஏறினார். இந்த மாநாட்டில் மொத்தம் 125 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து தனது உரையைத் தொடங்கிய திருமாவளவன், தமிழகத்தில் விசிக இன்று அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, “இனி விசிக வெறும் கூட்டணி கட்சியாக மட்டும் சுருங்கிவிடக் கூடாது; எதிர்காலத்தில் தமிழகத்தின் ஆளுங்கட்சியாக விசிக வளர வேண்டும்” என்ற தனது வரலாற்றுச் சிறப்புமிக்க லட்சிய முழக்கத்தை முன்வைத்தார். மேலும், தவெகவுடன் இணைந்து பயணிப்போம் என்றும் அவர் உறுதியளித்துப் பேசினார்.

ஆனால், மாநாட்டில் எதிர்பார்த்ததை விடக் கட்டுக்கடங்காமல் அலைமோதிய மக்கள் கூட்டமும், மேடையில் ஏறியவர்களின் எண்ணிக்கையும் கடுமையான காற்றோட்டத் தடையையும் நெரிசலையும் உருவாக்கியது. இந்த அதீதக் கூட்ட நெரிசல் காரணமாக, தான் பேச நினைத்த பல விஷயங்களைச் சுருக்கிக் கொண்டு, சில நிமிடங்களிலேயே தனது உரையை நிறைவு செய்வதாகத் திருமாவளவன் அறிவித்தார்.

பேச்சை முடித்துவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்க முற்பட்டபோது, கட்டுக்கடங்காத அந்தப் பெருங்கூட்ட நெரிசலில் அவரும் சிக்கிக்கொண்டார். இதன் காரணமாக அவருக்குத் திடீரென லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த விசிக தொண்டர்களும் பாதுகாப்புத்தினரும் பதறிப்போய் அவருக்குத் தண்ணீர் கொடுத்து உதவினர்.

சிறிது நேரம் அங்கேயே ஓய்வெடுத்து தன்னை முழுமையாக ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகே, அவர் அங்கிருந்து பாதுகாப்பாகப் புறப்பட்டுச் சென்றார். மாநாட்டின் பிரம்மாண்ட வெற்றியும், தொண்டர்களின் எழுச்சியும் விசிகவினரிடையே பெரும் மகிழ்ச்சியை அளித்தாலும், இந்தத் திடீர் மூச்சுத்திணறல் சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சிறிது நேரம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது..
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *