
அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் படம்குறித்து கலவையான விமர்சனங்களைத் தெரிவித்து வரும் நிலையில், விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பதிவு கவனம் பெற்றுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் ‘துணிவு’. இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்க இருந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார்.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பைப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அப்போது வெளியிட்டிருந்தது. ஆனால், அதன்பிறகு படம்குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
திடீரென ஒரு நாள் மகிழ் திருமேனி இயக்குவாரென அறிவிப்பு வெளியானது. விக்னேஷ் சிவன் சொன்ன கதையை லைகா நிறுவனம் மாற்றம் கோரியிருந்ததால் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பின் அஜித்தின் ‘விடாமுயற்சி’ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “சில நேரங்களில் இந்த விஷயங்கள் எப்படி நடக்கும் என நீங்கள் கவலைப்படுவதை நிறுத்தும்போது அற்புதம் நிகழும்” எனப் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
