
நடிகர் நாக சைதன்யா – சோபிதா துலிபாலா திருமணம் அண்மையில் நடைபெற்றது. தனது முன்னாள் கணவர் திருமணம்குறித்து நடிகை சமந்தா மனம் திறந்துள்ளார்.
மறைந்த நடிகர் நாகேஸ்வரராவின் பேரனும், நடிகர் நாகர்ஜூனாவின் மகனுமான நாக சைதன்யாவை கடந்த 2017-ம் ஆண்டு மணமுடித்தார் நடிகை சமந்தா.
இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 2021-ம் ஆண்டு மணவாழ்விலிருந்து விலகுவதாக இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா திருமணம் முடித்தார்.
இந்நிலையில் தனது முன்னாள் கணவர் திருமணம்குறித்து அண்மையில் நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவரிடம், ‘உங்கள் முன்னாள் துணைவர் உங்களை விட்டுப் பிரிந்து புதிய வாழ்க்கை பயணத்தைத் தொடங்கியது குறித்து நீங்கள் பொறாமைப்பட்டுள்ளீர்களா?’ எனக் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சமந்தா, “நான் என் வாழ்க்கையில் பல விஷயங்களைக் கடந்து வந்திருக்கிறேன். நான் முற்றிலும் ஒரு குணத்திலிருந்து விலகியிருக்க விரும்புகிறேன் என்றால் அது பொறாமை. அது என்னிடம் இருக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
பொறாமை தான் அனைத்து தீய விஷயங்களுக்கும் ஆணிவேர் என நினைக்கிறேன். மற்ற எல்லா விஷயங்களும் ஓகே தான். ஆனால் பொறாமை மாதிரியான எந்தக் குணத்தையும் அனுமதிக்க கூடாது. அது ஆரோக்கியமானதல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
