
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அவர் சர்வதேச ஓடிஐ போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான மார்கஸ் ஸ்டோய்னிஸ், 71 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1495 ரன்கள் குவித்துள்ளார். அதிரடி ஆட்டக்காரரான இவர் ஒரு சதமும் அடித்துள்ளார்.
பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் நிறைவடைந்த உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் இடம் பெற்றிருந்தார்.
இந்த நிலையில், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அவர் சர்வதேச ஓடிஐ போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தனது ஓய்வு முடிவுகுறித்து ஸ்டோய்னிஸ், “ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியது மிகப்பெரிய மரியாதை. இந்த முடிவு எளிதானது அல்ல. ஆனால் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஸ்டோய்னிஸின் முடிவைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் வரவேற்றுள்ளார். “ஸ்டோய்னிஸ் எப்போதும் அணிக்கு ஒரு முக்கிய சொத்தாகத் திகழ்ந்துள்ளார், அவரது பங்களிப்புக்கு நன்றி” என்று மெக்டொனால்ட் கூறியுள்ளார்.
ஏற்கனவே மிட்செல் மார்ஷ், கேப்டன் பாட் கம்மின்ஸ் போன்றோர் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், ஸ்டோய்னிஸின் ஓய்வு அறிவிப்பு ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னால் இந்த இழப்பை ஆஸ்திரேலியா எவ்வாறு சமாளிக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
