
மேற்கு வங்கத்தின் முதல் பாஜக அமைச்சரவையின் முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.
மேற்கு வங்கச் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 இடங்களில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றிபெற்று மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. நாடு விடுதலை பெற்றபின் மேற்கு வங்கத்தில் முதன்முறையாகப் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. மேற்குவங்கத்தில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் நந்திக்கிராமம், பவானிப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்றுள்ளார். பவானிப்பூரில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
இந்நிலையில் கொல்கத்தாவில் பாஜக அமைச்சரவையின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பாஜக தலைவர் நிதின் நவீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் மேற்கு வங்கப் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார். பதவியேற்றுக்கொண்டபின் கோப்பில் சுவேந்து அதிகாரி கையொப்பமிட்டார்.
மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட சுவேந்து அதிகாரி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் ஆகியோரிடம் வாழ்த்துப் பெற்றார்.
சுவேந்து அதிகாரியுடன் திலிப் கோஷ், அக்னிமித்ர பால், அசோக் கீர்த்தனியா, சுதிராம் தூது, நிசித் பிரமாணிக் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வாழ்த்துப் பெற்றுக்கொண்டனர்.



