
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிர்மாய்க்கப்பட்ட வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கவுள்ளதாக நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டிருந்தார்..
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை 2020 ஆம் ஆண்டில் காவல்துறையினர் கைது செய்து, சிறையில் வைத்து தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 காவலர்கள் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சம்பவம் நடந்தபோது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றியப் பெண் காவலர் ரேவதி, பியூலா, உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர்.
மொத்தம் 100 க்கும் மேற்பட்ட சாட்சிகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து, 6 ஆண்டுகள் மேலாக நடைபெற்ற இந்த வழக்கில் கைதானவர்கள் தங்களுக்கு ஜாமீன் கோரி மாவட்ட, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், வழக்கின் விசாரணை நிறைவடைந்ததால் வருகின்ற 23 ஆம் தேதி தீர்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டிருந்தார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியச் சாத்தான்குளம் சம்பவத்தில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்பட இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



