இஸ்ரேல் தாக்குதலில் 4 ஆயிரம் குழந்தைகள் உட்பட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்து விட்டதாக பாலஸ்தீன சுகாதார துறை அறிவித்தது.
கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் திடீரென நுழைந்த பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், சுமார் 1400 அப்பாவி இஸ்ரேலியர்களை கொன்று, பல பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தி, பச்சிளம் குழந்தைகளையும் மிருகத்தனமாக கொன்று, 242 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர்.
உலகையே அதிர்ச்சியடைய வைத்த இந்த தாக்குதலில் கடும் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதியெடுத்தது. தொடர்ந்து, அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன காசா முனை பகுதி மீது வான்வழி மற்றும் தரைவழி தொடர் தாக்குதல்களை தொடங்கியது. ஹமாஸ் அமைப்பினர் ஒளிந்திருக்கும் பகுதிகளில் எல்லாம் அவர்களை தேடித்தேடி வேட்டையாடி வருகிறது.
இன்றுடன் போர் துவங்கி ஒரு மாதமாகி விட்டது.நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் தாக்குதலில் 4 ஆயிரம் குழந்தைகள் உட்பட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்து விட்டதாக பாலஸ்தீன சுகாதார துறை அறிவித்தது.
ஆனால், இந்த எண்ணிக்கையை மறுத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு.போருக்கு பின்னர் காசாவின் நிலை குறித்து அவர் கூறியதாவது:எந்த உயிரிழப்பும் துரதிர்ஷ்டவசமானதுதான். பாலஸ்தீனம் கூறும் எண்ணிக்கையில் 10 ஆயிரம் பேரில் பலர் பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள். மேலும் காசா பொதுமக்களை மனித கவசங்களாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்துவதால் உயிரிழப்புகள் அதிகமாகிறது.
ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் தொடரும். போர் நிறைவடைந்ததும் காசா முனை பகுதியின் பாதுகாப்பு பொறுப்பை முழுமையாக இஸ்ரேல் எடுத்து கொள்ளும். எத்தனை நாள் வரை எனும் கால அளவை தற்போது கூற முடியாது. இந்த பொறுப்பை நாங்கள் தவிர்த்தால் மீண்டும் ஹமாஸ் பயங்கரவாதம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தலைதூக்கி விடும். அதை விட மாட்டோம்.
தற்போது போர் நடைபெற்று வரும் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன பொதுமக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும், பணய கைதிகள் மற்றும் வெளிநாட்டினர் வெளியேறவும் போருக்கு இடையில், ஒரு மணி நேர அல்லது அரை மணி நேர சிறு சிறு இடைநிறுத்தங்களை கொடுக்கலாம். அது கூட சூழ்நிலையை நாங்கள் முற்றிலும் ஆய்வு செய்த பிறகுதான் வழங்கப்படும்.
ஆனால், போர் நிறுத்தம் அல்லது தற்காலிக இடைநிறுத்தம் போன்ற பேச்சுக்களுக்கே இடமில்லை.
இவ்வாறு நேதன்யாகு கூறினார்.