Advertisements

தமிழ்நாட்டில் கடந்த 1990 ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி மிகப்பெரிய கட்சியாக வலம் வருகிறது .
திமுகவோ அல்லது அதிமுகவோ வெற்றி பெற வேண்டுமானால் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு தேவை என்ற நிலை இன்று வரை இருக்கிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் சமுதாய மக்கள் பாட்டாளி மக்கள் கட்சியை தங்கள் சொந்த கட்சி போல் கருதுகிறார்கள். மருத்துவர் ராமதாஸ் மீது அவர்கள் அளவற்ற அன்பும் பாசமும் வைத்திருக்கிறார்கள் ..
இளைய தலைமுறையினர் அனைவரும் அன்புமணியை ஆதரிக்கிறார்கள்..இன்னும் சொல்லப்போனால் வட மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் அன்புமணியை கண்டால் கடுமையான ஆரவாரம் செய்து அவரை வரவேற்கிறார்கள் . இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த தேர்தல் வரையிலும் மருத்துவர் ராமதாஸ் மருத்துவர் அன்புமணி ஆகிய இருவரும் சேர்ந்தே தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்கள் கூட்டணி குறித்தும் இருவரும் சேர்ந்தே முடிவெடுத்தார்கள் .
கூட்டணியை பொறுத்தவரையில் பாட்டாளி மக்கள் கட்சி அடிக்கடி பல்டி அடித்து வருவது அனைவரும் அறிந்த செய்தி தான் .இந்த சூழ்நிலையில் தான் தற்பொழுது , மருத்துவர் ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும் மருத்துவர் அன்புமணி தலைமையில் ஒரு அணியுமாக பாட்டாளி மக்கள் கட்சி பிரிந்து விட்டது . ஏதாவது ஒரு கட்டத்தில் சமரசம் ஏற்பட்டு விடும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அதற்குண்டான அறிகுறி எதுவும் தெரியவில்லை.
இதற்கிடையே அதிமுக தரப்பில் பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணி சேர்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து செயல்பட்டு வருகிறார்கள் .
தற்போது , அதிலும் ஏராளமான குழப்பங்கள் நிலவுகின்றன. அன்புமணியை பொறுத்தவரையில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி என்று முடிவு எடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசி இருக்கிறார். தனக்கு 15 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா எம்பி பதவியும் தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது பற்றி பாரதிய ஜனதா கட்சி மேலிடம் ஆலோசனை நடத்தி வருகிறது .
இதற்கிடையே மருத்துவர் ராமதாஸ் யாருடன் கூட்டணி சேர்வது என்பதில் மிகப்பெரிய குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியுடன் அன்புமணி சேர்வதால் திமுகவுடன் சேரலாம் என்று முடிவு எடுத்தார் . இது தொடர்பாக, மு.க ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவர் முயற்சி செய்தார் ஆனால் மு க ஸ்டாலின் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார் .
பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைந்த நிலையில் அன்பு மணிக்கு தான் செல்வாக்கு இருக்கிறது என்ற தகவலை அறிந்து கொண்ட முக ஸ்டாலின் விடுதலைச் சிறுத்தைகள் இவர்களைவிட பலமான கட்சி என்ற தீர்க்கமான முடிவில் இருக்கிறார் இதன் காரணமாக அவர் ராமதாசை புறக்கணித்து விட்டார் . தற்பொழுது டெல்லி பாஜக மாநில மேலிடம் நீங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்தால் நல்லது என சமரச பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்து வருகிறார்கள் ஆனால் மருத்துவர் ராமதாஸ் இதற்கு முற்றிலுமாக மறுத்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் உச்சகட்டமாக மாம்பழ சின்னம் யாருக்கு என்ற விவகாரம் தற்போது தலை தூக்கி நிற்கிறது . மருத்துவர் ராமதாஸ் தேர்தல் கமிஷனிடம் ஒரு மனு கொடுத்திருக்கிறார் . அந்த மனுவில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் நான்தான் இந்த கட்சியின் ஆரம்ப காலத்தில் இருந்தே மாம்பழச் சின்னத்தை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம் அந்த வகையில் மாம்பழச் சின்னத்தை எங்களுக்கு தான் தர வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார் .
இதற்கிடையே அன்புமணியும் சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்ள தயாராகி இருக்கிறார் அவரும் விரைவிலேயே தேர்தல் கமிஷன் இடம் ஒரு மனு கொடுக்க முடிவு செய்து இருக்கிறார் . பாட்டாளி மக்கள் கட்சியில் தற்பொழுது அன்புமணி பக்கம் சாய்ந்திருக்கும் வழக்கறிஞர் கே பாலு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் . ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூடி 2026 ஆம் ஆண்டு வரை அன்புமணி தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் தேர்தல் கமிஷனும் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறது . தற்பொழுது தேர்தல் கமிஷனை பொருத்தவரையில் ராமதாஸ் தரப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் தற்போதைய தொண்டர்கள் நிலவரம் பற்றி கேள்வி எழுப்பி உள்ளது . இதற்கிடையே அன்புமணி தரப்பில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களுக்கான ஏ. படிவம் பி படிவம் ஆகியவற்றில் நானே கையெழுத்திடுவேன் இதை யாரும் மாற்ற முடியாது என தெரிவித்துள்ளார் . இது மட்டுமில்லாமல் மாம்பழ சின்னம் எனக்கு ஒதுக்கப்பட்டு விட்டது என்றும் அறிவித்திருக்கிறார் .
இதனிடையே தேர்தல் கமிஷன் வருகிற டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம் இது தொடர்பாக முடிவு எடுத்து அறிவிக்க காத்திருக்கிறது . அந்த வகையில் தற்பொழுது அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியைத் தான் தேர்தல் கமிஷன் அங்கீகரித்திருக்கிறது . எனவே அந்த வகையில் மாம்பழ சின்னம் அன்புமணிக்கு தான் வழங்கப்படும் என தெரிகிறது .
மருத்துவர் ராமதாசை பொருத்தவரையில் ஏதாவது ஒரு பொது சின்னத்தில் தனியாகத்தான் போட்டியிட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது . இது ராமதாஸ் தரப்பில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது . வட மாவட்டங்களில் மாம்பழ சின்னம் மிகவும் பிரசித்தி பெற்ற சின்னமாகும் அந்த சின்னம் அன்பு மணிக்கு கிடைக்கும் பட்சத்தில் பெரும்பாலான வாக்குகள் மாம்பழ சின்னத்திற்கு தான் கிடைக்கும் .
ராமதாஸ் புது சின்னத்தில் போட்டியிடுவதால் மக்கள் மத்தியில் அந்த சின்னம் சென்றடைவதில் சிக்கல் இருக்கிறது இதனால் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்கு வங்கி மிகவும் குறைந்துவிடும் என்றும் அறியப்படுகிறது . இந்து மத புராணங்களில் ஒரு கதை உண்டு பரமசிவனும் பார்வதியும் ஒரு ஞானப் பழத்தை வைத்துக்கொண்டு இந்த பழம் யாருக்கு என்று கேட்பார்கள். அப்பொழுது முருகனும் விநாயகரும் எங்களுக்கு தான் என போட்டி போட்டு இறுதியில் உலகைச் சுற்றி வருபவருக்கு அந்த பழம் கிடைக்கும் என அறிவிக்கப்படுகிறது .
முருகப்பெருமான் உலகை சுற்றுவதற்காக மயில் ஏறி கிளம்பி சென்ற சமயத்தில் விநாயகப் பெருமான் பெற்ற தாயும் தந்தை தான் உலகம் என்று தாய் தந்தையை சுற்றி அந்த பழத்தை தட்டிச் சென்று விடுவார் . அதுபோலத்தான் தற்பொழுது மாம்பழ சின்னத்தை அன்பு மணி மிக எளிதாக தட்டிச் சென்று விடுவார் என தெரிகிறது. இதன் மூலம் அதிமுகவை பொருத்தவரையில் மாம்பழத்தை யார் கொண்டு வருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்று முடிவு செய்து வைத்திருக்கிறார்கள் .
எனவே பாரதிய ஜனதா கட்சி மூலமாக அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைவார். ராமதாஸ் கழட்டி விடப்படுவார் என்ற சூழ்நிலை நிலவுகிறது . அரசியலில் மிகப்பெரிய அறிவாளியாகவும் ஜாம்பவானாகவும் திகழும் மருத்துவர் ராமதாஸ் இந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்க போகிறார் . அவரால் வெற்றி பெற முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .
Advertisements





