விசிகவில் ஷாநவாஸ் விலகல்.? “அவரைக் கொச்சைப்படுத்த விரும்பல”.!

தமிழ்நாட்டு அரசியலில் தற்போது எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரு பெயர்தான் விவாதப் பொருளாக மாறிக்கொண்டிருக்கிறது. அது வேறு யாருமல்ல, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளரும், நாகை  முன்னாள் சட்டமன்ற  உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ் தான். சமீபத்தில் உளுந்தூர்பேட்டையில் நடந்து முடிந்த விசிகவின் மாநாட்டில் அவர் கலந்துகொள்ளாதது மற்றும் கூட்டணிக் கட்சிகள் குறித்த அவரின் தொடர்ச்சியான கருத்துகள் ஆகியவை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சூழலில், விசிகவின் துணைப் பொதுச்செயலாளர் சா. ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டி ஒன்று இன்னும் பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்துள்ளது..அது என்ன விஷயம் என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்..!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளுந்தூர்பேட்டையில் மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், இந்த மாநாட்டில் கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவரான முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கலந்துகொள்ளவில்லை. இது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியது.

குறிப்பாக, தமிழக அரசியலில் நிலவும் பல்வேறு அரசியல் சூழல்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் குறித்த விசிகவின் நிலைப்பாடுகளில் இருந்து ஆளூர் ஷாநவாஸின் கருத்துகள் மாறுபடுவதாகத் தகவல்கள் பரவின. இதனால் அவர் கட்சியில் இருந்து விலகப் போகிறாரோ அல்லது வேறு பாதையைத் தேர்ந்தெடுப்பாரோ என்ற ஊகங்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டன.

இத்தகைய பரபரப்பான சூழலில், தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த விசிக துணைப் பொதுச்செயலாளர் சா. ரஜினிகாந்த், ஆளூர் ஷாநவாஸ் குறித்த கேள்விகளுக்கு  பதிலளித்தும்  அதே நேரத்தில் கட்சியின் நிலைப்பாட்டையும்  விளக்கிப் பேசினார்.அப்போது அவரிடம், விசிகவின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து எழுப்பும் கேள்விகள் குறித்து முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த்:

“விடுதலை சிறுத்தைகளைப் பொறுத்தவரை ஷாநவாஸோ அல்லது நானோ சொல்வது கட்சியின் முடிவாகாது. எங்கள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சொல்வதுதான் இறுதி நிலைப்பாடு. எங்கள் கட்சியின் உயர்நிலைக் குழு எடுப்பதுதான் முடிவு. அந்த உயர்நிலைக் குழுவில் ஆளூர் ஷாநவாஸும் ஒரு அங்கம். அவரும் பங்கேற்றுத்தான் சில முக்கிய முடிவுகளை எடுத்தார்.

ஆனால், அதன்பிறகு இடையில் நடந்த விஷயங்களைச் சொன்னால் அது அவரை அவமரியாதை செய்வதைப் போலாகிவிடும். அவரை எங்களால் கொச்சைப்படுத்த விரும்பவில்லை,” என்றார்.தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், ஆளூர் ஷாநவாஸ் மாநாட்டிற்கு வராதது குறித்துப் பேசுகையில், “அவர் சென்னையில் இருந்தும் கூட உளுந்தூர்பேட்டை மாநாட்டிற்கு வரவில்லை. அப்படியென்றால் அவர் வேறு ஏதோ ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதுதான் பொருள்.

அவரது கருத்துகளில் மாறுபாடுகள் இருக்கலாம் அல்லது விசிகவின் கள நிலவரத்தை அவர் பரிசீலனை செய்வதாக அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதனால் அவர் சொல்வதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. கட்சியின் தலைவரும் முதன்மைக் குழுவும் எடுப்பதுதான் இறுதியானது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்..

சா. ரஜினிகாந்தின் இந்தப் பேட்டி வெளியானதிலிருந்து, விசிகவிற்குள்ளும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. ஆளூர் ஷாநவாஸ் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்விகளுக்கு எதிர்வரும் நாட்களில் தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *