
இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் 150 ஆண்டுகள் நிறைவடைவது குறித்து இன்று மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, “வந்தே மாதரம் ஊக்குவித்த சுதந்திரப் போராட்டத்தால் நாம் இன்று சுதந்திரமாக இங்கு அமர்ந்திருக்கிறோம். ஆகவே இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கூட்டணி என்றெல்லாம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதில் , “சர்தார் வல்லபாய் பட்டேல், பகவான் பிர்சா முண்டா ஆகியோரின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டங்களிலும் நாம் ஈடுபட்டு இருக்கிறோம். வந்தே மாதரம் பாடல் நமது சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கிய பங்காற்றியது.
நமது போர் முழக்கத்தின் அடிப்படையாக இருந்தது வந்தே மாதரம். வந்தே மாதரத்தின் 100வது ஆண்டு என்பது இந்தியாவின் அவசரகாலம் அமல்படுத்தப்பட்ட காலத்தில் வந்தது.
வந்தே மாதரத்தின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டபோது இந்தியாவின் ஜனநாயகம் மழுங்கடிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த 150வது ஆண்டு இந்தியாவின் சுயசார்பு காலத்தில் கொண்டாடி வருகிறோம். தற்போது நாம் மேற்கொள்ளும் இந்த விவாதம் எதிர்கால இந்தியாவிற்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். வந்தே மாதரம் இயற்றப்பட்டபோது நாடு அடிமைச் சங்கிலியில் சிக்கி இருந்தது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் இங்கிலாந்து ராணியை கடவுள் காப்பாற்ற வேண்டும் என்ற பாடலை தான் இந்தியர்கள் பாட வேண்டும் என்று நிர்பந்தித்தார்கள். ஆனால் அந்த நேரத்தில் தான் வந்தே மாதரம் பாடல் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தது.இந்தியாவின் கனவுகளை 150 வருடங்களுக்கு முன்பாகவே சுமந்து இருந்தது வந்தே மாதரம் பாடல். வந்தே மாதரம் என்பது வெறும் அரசியல் வார்த்தை கிடையாது அது இந்தியர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தை.
இந்தியர்களை பிளவுபடுத்தி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை ஆங்கிலேயர்கள் கொள்கையாக வைத்திருந்தார்கள். ஆனால் வங்காளத்தின் அறிவு அறிவுசார் சக்தியாக இந்தியர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும் வகையில் வந்தே மாதரம் பாடல் உருவாக்கப்பட்டது.மேற்குவங்க மாநிலத்தை சிதைத்து விட்டால் ஒட்டுமொத்த நாட்டையும் சேர்த்து விடலாம் என ஆங்கிலேயர்கள் கனவு கண்டார்கள். அதனாலேயே வங்காளத்தை பிரித்தார்கள்.
தமிழ் மொழியில் கவிதைகளை எழுதி ஆங்கிலேயர்களை கலங்கடித்தவர் தமிழரான சுப்பிரமணிய பாரதி” என பேசினார்.




