
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் மட்டும் 1,020 கோடி ரூபாய் ஊழலைக் கண்டறிந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில் அது குறித்து நேர்மையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறையில் ஒப்பந்தப் பணி வழங்கப் பத்து விழுக்காடு கையூட்டுப் பெற்று 1020 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநருக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் நேரு தனது உறவினர்கள் வாயிலாக டெண்டருக்கு ஏழரை விழுக்காடு முதல் பத்து விழுக்காடு வரை கமிஷன் கொள்ளை அடித்துள்ளது, இக்கடிதம் வாயிலாக வெளிவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.. கழிப்பறை கட்டுவது முதல், நபார்ட் வங்கி திட்டங்கள் வரை பட்டியல் போட்டு, பல்வேறு நிலைகளில் இந்த மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். செய்திகள் தெரிவிக்கின்றன.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை கொள்ளையடித்த ஊழல் பணத்தையெல்லாம் மீட்டெடுத்தாலே, மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும், கம்பி எண்ணப் போவது உறுதி எனக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையிலேயே ஸ்டாலினுக்கு மடியில் கனமில்லை என்றால், இந்த ஊழல்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.


