வந்தேபாரத் ரயில்கள் இந்தியாவின் ஒரு மைல் கல்லாக விளங்குவதாகப் பேச்சு..!

Advertisements

வளர்ச்சியடைந்த பாரதத்தைக் கட்டமைக்கும் திட்டத்தில் வந்தேபாரத் ரயில்கள் ஒரு மைல்கல்லாக விளங்குவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பனாரஸ் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பனாரஸ் – கஜுரகோ இடையான வந்தே பாரத் ரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

இதேபோல் லக்னோ – சகாரண்பூர், பிரோஸ்பூர் – தில்லி, எர்ணாக்குளம் – பெங்களூர் ஆகிய நகரங்கள் இடையிலான வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடக்கி வைத்தார். இந்த விழாவில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெரும்பாலான நாடுகளின் வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு முதன்மையான பங்காற்றியுள்ளதாகத் தெரிவித்தார். சிறந்த போக்குவரத்துத் தொடர்பால் ஒரு நகரின் வளர்ச்சி தொடங்குவதாகவும், உட்கட்டமைப்பு பெரிய பாலங்கள், நெடுஞ்சாலைகளுடன் முடிந்து விடுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

இன்று இந்தியாவில் 160க்கு மேற்பட்ட வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். கடந்த 11 ஆண்டுகளில் காசிக்கு 11 கோடிப் பக்தர்களும், ராமர் கோவில் கட்டியபின் அயோத்திக்கு 6 கோடிப் பக்தர்களும் வந்துள்ளதாகவும், இதனால் உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரம் பயனடைவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

முன்னதாக வந்தே பாரத் ரயிலில் இருந்த பள்ளி மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். கேரளத்தின் எர்ணாக்குளம், கருநாடகத்தின் பெங்களூர் இடையான வந்தே பாரத் ரயிலையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் தொடக்கி வைத்தார். எர்ணாக்குளம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் இராஜேந்திர அர்லேகர், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பங்கேற்றவர்களுக்கு மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி இனிப்புகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். வந்தேபாரத் ரயில் தொடக்க விழாவுக்குப் பின் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி அதே ரயிலில் ஏறிப் பயணம் செய்தார். அப்போது பேசிய அவர் கொச்சி, பெங்களூர் நகரங்கள் இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்வதாகவும், அவர்களுக்கு இந்த ரயில் உதவும் என்றும் தெரிவித்தார்.

வந்தேபாரத் ரயில்களின் அறிமுகம் ரயில்வே துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுரேஷ்கோபி கூறினார். எர்ணாக்குளத்தில் இருந்து பெங்களூர் செல்லும் வந்தேபாரத் ரயிலில் பயணம் செய்த சுரேஷ்கோபி திருச்சூரில் இறங்கினார். அங்குச் செண்டை மேளம் முழங்கச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *