புலியைத் துரத்தினாரா அமைச்சர்..? வன்னி அரசைத் துரத்தும் சர்ச்சை..!

சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, முதுமலைப் புலிகள் காப்பகத்தில் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று புலியை விரட்டிச் செல்வது போன்ற வீடியோ வெளியாகிச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு…

வனப்பகுதிக்குள் தொலைவில் செல்லும் புலியைத் துரத்திச் செல்வது போல் அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள இந்த வீடியோவால் தான் அவர் மீது சர்ச்சை வெடித்துள்ளது.நீலகிரி மாவட்டம் மசினகுடிக்கு நவம்பர் 10ஆம் நாள் நலத்திட்ட உதவிகள் வழங்கவும், ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் சென்ற சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை, முதுமலைப் புலிகள் காப்பகத்தின் வனப்பகுதிக்கு வனத்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

வனப்பகுதியைப் பார்வையிட்டபடியே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துச் சென்ற அமைச்சர் வன்னி அரசு, ஒரு கட்டத்தில் தொலைவில் புலி ஒன்று நடந்து செல்வதைப் பார்த்து, அதனைத் துரத்திச் சென்றது போன்ற காட்சிகளை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

மேலும், ஜீப்பின் முகப்பில் அமர்ந்தபடி யானையைப் பார்வையிடுவது, வனத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் வனத்துறை வாகனங்களில் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்வது போன்ற வீடியோ பதிவுகளும் வெளியாகியுள்ளன. இந்த வீடியோக்கள் வெளியான நிலையில்தான், சமூக ஆர்வலர்கள் அமைச்சருக்கு எதிராகக் கேள்விக் கணைகளை வீசி வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று ரீல்ஸ் எடுக்க அமைச்சரை எப்படி அனுமதித்தார்கள்? என ஆவேசமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அமைச்சர் என்ற அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த அவர் மீது வனத்துறைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அமைச்சர் தரப்பில் விளக்கம் வெளியிடப்படாத நிலையில், வனத்துறை வேறொரு விளக்கத்தை அளித்துள்ளது.

அமைச்சர் தங்கியிருந்த மசினகுடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிக்குச் சொந்தமான நிலத்தில்தான் அந்தப் புலி காணப்பட்டதாகவும், அது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நடக்கவில்லை என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், வனத்துறையின் விளக்கம் உண்மையல்ல எனக் கூறிச் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கொந்தளித்து வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *