
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்குக் கிழக்குத் தென்கிழக்கில் 790 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது மேற்கு வடமேற்காக நகர்ந்து புயலாக உருமாறி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும் என்று குறிப்பிட்டுள்ளது. அது மேலும் வலுவடைந்து அக்டோபர் 28ஆம் நாள் காலையில் தீவிரப் புயலாக உருவெடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அது மேலும் வடமேற்காக நகர்ந்து அன்று மாலை முதல் இரவுக்குள் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்கும் கலிங்கப்பட்டினத்துக்கும் நடுவே காக்கி நாடாவில் கரையைக் கடக்கும் என்று தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று குறிப்பிட்டுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிக அளவாகத் திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 13 செண்டிமீட்டரும், ஊத்தில் 12 செண்டிமீட்டரும், காக்காச்சியில் 10 செண்டிமீட்டரும், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 9 செண்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.


