
வங்கதேசத்தில் இடைக்கால அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இப்படியான சூழலில் வங்கதேசத்தில் அடுத்தடுத்து 5 ராணுவ அதிகாரிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.அண்டை நாடாக வங்கதேசம் உள்ளது. அமைதியாக இருந்த இந்த நாட்டில் கடந்த ஆண்டு பெரும் வன்முறை வெடித்தது. அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக திரும்பியது.
வங்கதேசத்தில் பதற்றம் மட்டும் குறையவே இல்லை. வங்கதேசத்தில் தொடர்ந்து ராணுவம் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.இதற்கிடையே தான் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கும், ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமானுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. வாக்கர் உஸ் ஜமான், ஷேக் ஹசீனாவின் உறவினர் என்பதோடு, அவர் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறார். ஆனால் இடைக்கால அரசு அப்படியில்லை. இந்தியாவுடன் மோதி கொண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. அதுமட்டுமின்றி வாக்கர் உஸ் ஜமானை பதவியில் இருந்து நீக்கவும் இடைக்கால அரசு, பாகிஸ்தானுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியது. இதனை நம் நாட்டின் உளவுத்துறை முறியடித்தது.
இப்படியான சூழலில் தான் 5 நாள் பயணமாக வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். இதற்கிடையே வங்கதேசத்தில் அடுத்தடுத்து ராணுவ அதிகாரிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி 2 பிரிகேடியர், ஒரு கர்னல், ஒரு லெப்டினன்ட் கர்னல், ஒரு மேஜர் என 5 பேர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதோடு அவர்கள் அனைவரும் தங்களின் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு 24 மணிநேர கண்காணிப்பில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயரை வங்கதேச இடைக்கால அரசு வெளியிடவில்லை.
