
தில்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னாவும் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னா அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். தில்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசினார்.
அதன்பின் இருநாட்டுத் தலைவர்களுடன் உயர்நிலைக் குழுவினர் அமர்ந்து பேச்சு நடத்தினர். இந்தப் பேச்சில் பல்வேறு துறைகளில் இரு நாடுகளிடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இரு நாடுகளிடையே தூதரக உறவுகள் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவுகூரும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
அதன்பின் பிரதமர் நரேந்திர மோடியும் மங்கோலிய அதிபரும் கூட்டாகச் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது அமிர்தசரசுக்கும் தில்லிக்கும் விமானங்களை இயக்க மங்கோலிய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், இது சுற்றுலா, வணிகம் ஆகிய துறைகளில் இரு நாடுகளிடையான ஒத்துழைப்பை மேலும் விரிவாக்கும் என்று மங்கோலிய அதிபர் தெரிவித்தார்.



