
கடந்த புதன்கிழமை அன்று பல நாடுகள் மீது பரஸ்பர வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இது உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சீனா தவிர மற்ற நாடுகளுக்கான பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.உயர்ந்து வந்துகொண்டிருந்த தங்கம் விலையானது கடந்த வாரம் டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து சரிவை சந்தித்தது. ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று தங்கம் ஒரு கிராமுக்கு 110 ரூபாய் சரிந்து சுமார் 8,500 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து 4 நாட்களுக்கு தங்கத்தின் விலை குறைந்தது. ஏப்ரல் 9 அன்று ஒரு கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து சுமார் 8,390 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது. தற்போது மேலும் உயர்ந்து ஒரு கிராம் 8,660 ரூபாய்க்கு விற்பனையானது.
2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் தங்கம் ஒரு சவரனுக்கு சுமார் 3,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதன் பிறகு 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியின்போது தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு சவரன் சுமார் 10,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இதன் பிறகு கொரோனா நோய் தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இதன் பிறகு ரஷ்யா – யுக்ரேன் போர் போன்ற பல காரணங்களினால், தங்கத்தின் விலை உச்சத்தை எட்டி, தற்போது ஒரு சவரன் சுமார் 67,000 முதல் 69,000 ரூபாய் வரை விற்பனையாகிறது.
உலக தங்க கவுன்சில் வெளியிட்ட தகவலின்படி, உலகளவில் சுமார் 20% தங்கத்தை மத்திய வங்கிகள் வாங்குகின்றன. தங்கத்தை வாங்கும் துறைகளில், மூன்றாம் இடத்தில் மத்திய வங்கிகள் உள்ளன.அதிக அளவிலான தேவை காரணமாக தங்கத்தின் விலை அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்புகள் இல்லை என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.”எப்போதும் எறிக்கொண்டே இருக்கும் அதன் விலை மற்றும் நிலைத்தன்மை காரணமாக இந்தியாவைப் போல மற்ற நாடுகளிலும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளைத் தாண்டி பொது மக்களும் தங்கத்தில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதுவும் தங்கத்தின் விலை உயர்வதற்கான காரணியாக இருக்கின்றது”, என்று அவர் கூறினார்.
