பாஜக மாநிலத் தலைவரின் பேச்சு சர்ச்சையானது ஏன்?

Advertisements
பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை திரிஷா மற்றும் விஜய் பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரின் பேச்சு வருத்தமாகத்தான் இருக்கிறது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
“தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளில் கட்சியில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. கட்சி நிர்வாகிகளே பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள்.” என்று பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பெண்களின் வங்கிக் கணக்கில் 5000 ரூபாய் வரவு வைக்கப்படுவதை பா.ஜ.க தடுக்க பார்க்கிறது என்று முட்டாள்தனமான கருத்தை தி.மு.க-வினர் பேசி வருகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக கொடுக்கின்ற பணத்தை பாஜக அரசு தடுத்ததா? தற்போது வேண்டுமென்றே காதில் பூ சுற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள்.
பா.ஜ.க அரசு தடுப்பது போன்றும் முதல்வர் பெண்களின் பாதுகாவலர் போன்று ஒரு டிராமா செய்கிறார்கள். இந்த அரசாங்கமே டிராமா அரசாங்கம், தற்போது மற்றொரு டிராமாவை பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசு அலுவலகங்கள் முன்பும் ஆசிரியர்கள் செவிலியர்கள் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் என பலரும் போராடி வருகிறார்கள். ஐந்து வருடங்களாக கோடை காலம் வந்தது அப்போதெல்லாம் குடிப்பதற்கு கூட தண்ணீர் விடவில்லை. ஆனால் தற்போது புதிதாக கோடைகால சிறப்பு நிதி என்று 2000 ரூபாய் கொடுக்கிறார்கள்.
இப்போது பள்ளி, கல்லூரிகளில் எங்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை, பேருந்து நிலையம் ரயில் நிலையம் என்று எங்குமே பாதுகாப்பு கிடையாது. வெளியில் சென்ற பெண்கள் பாதுகாப்புடன் வீடு திரும்புவார்களா? என்று வீட்டில் உள்ளவர்கள் பதற்றத்துடனே இருக்கிறார்கள். ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால் அனைத்தையும் மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் தமிழக பெண்கள் அதனை மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். இந்த அரசு வீட்டுக்கு போவது உறுதி.
பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை திரிஷா மற்றும் விஜய் பற்றி பேசியதைப் பொறுத்தவரையில், அவர் மிகவும் அமைதியாக பண்பாக பேசக்கூடியவர். சட்டப் பேரவையில் நான் கூட ஆக்ரோஷமாக பேசுவேன். ஆனால் அவர் மிகவும் நாகரிகமாக பேசுவார். அவர் எதற்காக திரிஷா பற்றி அவ்வாறு பேசினார் என்று தெரியவில்லை. அவர் பேசியது வருத்தமாக தான் உள்ளது. எனது கருத்தை அவரிடம் நான் கூறுவேன்.
அதேசமயம், தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளில் கட்சியில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. கட்சி நிர்வாகிகளே பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்கள். அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. சிவாஜி போன்ற பேச்சாளரை இன்றும் கட்சியில் வைத்துள்ளார்கள், பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுகிறது, ஆனால், திடீரென பெண்களுக்கு அவமானம் நடந்தது போன்று சின்ன விஷயத்தை ஊதி ஊதி பெரிதாக பார்க்கிறார்கள். இந்த விஷயத்தில் கண்டனம் தெரிவிப்பதற்கும், கருத்து தெரிவிப்பதற்கும் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு அருகதையே கிடையாது.” என்று அவர் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *