
8 மணி நேர வேலையைப் பெற்றுத்தந்த வ.சுப்பையா நினைவுத் தினம்!
வாழ்க்கை வரலாறு:
வ.சுப்பையா பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி 1911 ஆம் ஆண்டு பிரெஞ்சிந்தியப் பகுதியான பாண்டிச்சேரியில் வெள்ளாழர் வீதியில் வசித்த வரதராஜிலு – ராஜபங்காரு தம்பதியரின் மகனாகப் பிறந்தார்.இவர் கலவை கல்லூரி உயர்நிலை பள்ளியில் கல்வி கற்றவர் ஆவர். ஆரம்பகால அரசியல் வாழ்வில் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டார் .1933 ஆம் ஆண்டு அரிஜன சேவா சங்கம் துவக்கினார். இவர் “சுதந்திரம்” என்ற பத்திரிகை நடத்தி வந்தார். இவர் புதுவை ஒன்றிய பிரதேசத்தின் தொழிற்சங்க இயக்கம் உருவாக்கப்பட்டதின் முன்னோடி ஆவர்.
அரசியல் பணி:
1935, 36 களில் புதுவைப் பஞ்சாலைகளில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திற்கும் வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் இருந்து செயலாற்றியுள்ளார்.1936 இல் தொழிற்சங்க உரிமை கோரி மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும் இணைந்து நடத்திய போராட்டத்தை ஒடுக்க 1936 ஜூலை 30 அன்று பிரஞ்சு ஏகாதிபத்யம் ராணுவத்தின் துணையோடு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது.
எட்டு மணி நேரவேலையும் தொழிற்சங்கம் அமைப்பதற்கு உரிமையும்:
இப்போராட்டத்தின் விளைவாக 1937 ஏப்ரல் 6 இல் பிரஞ்சு- இந்தியாவிற்கான தொழிற்சங்கச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதன்படி தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 மணிநேர வேலையும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும் வழங்கப்பட்டன. ஆசிய நாடுகளிலேயே 8 மணிநேர வேலை என்பது புதுச்சேரியில்தான் முதன்முதலாக அமுலாக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம், ஓய்வுக்கால ஊதியம், பெண் ஊழியர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் சமூகப்பயன் அளிக்கும் திட்டங்களும் வரையறுக்கப்பட்டன.
12 மணி நேர வேலை, மிகக் குறைவான ஊதியம், தொழிற்சங்க உரிமை மறுப்பு போன்ற பல இன்னல்களை அனுபவித்து வந்த 15,000 ஜவுளி தொழிலாளர்களை 1935 ஆம் ஆண்டு ஒருங்கிணைத்தார். அடிப்படை உரிமைகள் கோரி போராட்டம் நடத்திய ஆலை தொழிலாளர்கள் 12 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.


