
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் மருந்து கம்பெனியில் கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளதாகக் காவல் கண்காணிப்பாளர் பரிதோஷ் பங்கஜ் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவின் சங்கரெட்டி மாவட்டம் பசமைலாரத்தில் உள்ள சிகச்சி மருந்து கம்பெனியில் நேற்று நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரெனக் கொதிகலன் வெடித்ததில் அங்கிருந்த தொழிலாளர்கள் காயமடைந்தனர். தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பரிதோஷ் பங்கஜ் தெரிவித்துள்ளார்.
ஆலையைப் பார்வையிட்ட தெலங்கானா மாநில அமைச்சர் தாமோதர் ராஜ நரசிம்மா, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும், மதிப்பான தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். உயிரிழந்தோரின் குடும்பங்களைக் காக்கும் பொறுப்பு சிகச்சி நிறுவனத்துக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே இந்த விபத்தின் காரணமாகச் சிகச்சி நிறுவனத்தின் பங்குகள் 12 விழுக்காடு வீழ்ச்சியடைந்தன.

