
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாகப் பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார்.
சமீப நாட்களாக திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தவெக சார்பில் போட்டியிடப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் காட்டுத்தீயாய் பரவின. இது தொடர்பாகத் தெளிவான விளக்கம் அளிப்பதாகத் தெரிவித்திருந்த ராகவா லாரன்ஸ், இயக்குநர் பாரதிராஜாவின் மறைவையொட்டி தனது அறிவிப்பை ஒரு நாள் தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ், அரசியலுக்கு வருவது குறித்த தனது நிலைப்பாட்டை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்:
“நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்ற செய்தி பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு உங்கள் ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் கருத்துகளில் பதிவிடுங்கள். நீங்கள் ‘வேண்டாம்’ என்று சொன்னால், நான் அரசியலுக்கு வரமாட்டேன். தொடர்ந்து எனது சுயநலமற்ற சமூக சேவையை மட்டுமே செய்வேன்.
ஒருவேளை நீங்கள் ‘ஆம்’ என்று சொன்னால், நான் அரசியலில் இறங்கத் தயாராக இருக்கிறேன். உங்கள் ஆசியுடன் எப்போது, யாருடன் இந்த அரசியல் பயணத்தைத் தொடங்கப்போகிறேன் என்பதை விரைவில் அறிவிப்பேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அரசியலில் ஈடுபடுவது குறித்து முழுக்க முழுக்க ரசிகர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பதாக அவர் கூறியிருப்பது, அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகவா லாரன்ஸின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் முக்கிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. அவர் அரசியலுக்கு வருவாரா அல்லது சமூக சேவையிலேயே தொடர்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


