கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் காதலிக்க மறுத்த பெண்ணை அரசு மருந்தகத்தில் புகுந்து சரமாரியாகக் கத்தியால் குத்திய இளைஞனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர் திவ்யா. இன்று மருந்தகத்தின் உள்ளே நுழைந்த இளைஞர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் திவ்யாவைச் சரமாரியாகக் குத்தினார்.
இதனால் திவ்யா இரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தார். இவர்களது சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் பெண் ஊழியரைக் கத்தியால் குத்திய இளைஞனை அறையில் வைத்துப் பூட்டிவிட்டுக் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் இளைஞனைப் பிடித்துச் சென்றனர்.
திவ்யாவை மீட்டு இருசக்கர வாகனத்தின் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிரச் சிகிச்சை அளித்து வருகின்றனர். தன்னைக் காதலிக்க மறுத்ததால் அந்த இளைஞன் கத்தியால் குத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


