தமிழக அரசியலில் தற்போது எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தவெக பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தபோது, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆதரவளித்த அதே இடதுசாரி கட்சிகள், தற்போது விஜய்யின் அரசுக்கு எதிராகவே நேரடிப் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளன. இதனால் முதல்வர் விஜய் கடும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்துள்ளார். அது என்னென்ன பிரச்சினைகள்? இடதுசாரிகள் ஏன் இவ்வளவு தீவிரமாக விஜய்யை எதிர்க்கிறார்கள்? வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம்!”
“தவெக அரசு எதிர்கொள்ளும் முதல் மற்றும் மிக முக்கியமான சவால்தான், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம். ஏற்கெனவே உள்ள சட்டமன்றத்திலும் தலைமைச் செயலகத்திலும் இடப்பற்றாக்குறை இருப்பதால், புதிய கட்டிடம் மூலம் அதைச் சரிசெய்யலாம் என்பது விஜய்யின் ஐடியா. திட்டம் என்னவோ நல்லர்தான், ஆனால் இடம் தேர்ந்தெடுப்பதில்தான் சிக்கல் வெடித்திருக்கிறது!
பட்டினப்பாக்கம் என்பது காலம் காலமாக மீனவ மக்கள் அதிக அளவில் வாழ்ந்து, மீன் விற்பனை செய்து வரும் பகுதி. இந்த இடத்தில் தலைமைச் செயலகம் வந்தால், உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் அந்த மீன் சந்தையைக் கடந்துதான் செல்ல வேண்டியிருக்கும். ‘நாற்றமடிக்கிறது’ என்று மூக்கை மூடிக்கொண்டு செல்லும் அதிகாரிகள், போகப் போக அந்த மீனவர்களை அங்கிருந்து வலுக்கட்டயமாக வேறு பகுதிக்கு மாற்ற உத்தரவிடுவார்கள் என்ற நியாயமான அச்சம் மீனவர்களிடம் எழுந்துள்ளது.
இந்த மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக ஏற்கெனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) போலீசாரின் தடையை மீறிப் போராட்டம் நடத்தியது. தற்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மீனவர்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்திற்குத் தயாராகி வருகிறது. தங்களுக்கு ஆதரவளித்த இடதுசாரிகளே தங்களுக்கு எதிராக மீனவர்களைத் திரட்டுவது விஜய்க்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.”
“இன்னொருபுறம், மாணவர்களின் கல்வியைக் குறித்தும் இடதுசாரிகள் விஜய்க்கு எதிராகக் களம் இறங்கியுள்ளனர். ‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்’ கீழ் மலேசியாவில் படித்து வரும் மாணவர் பாரதிதாசன் என்பவருக்கு வழங்க வேண்டிய நிதியைத் தமிழ்நாடு அரசு இன்னும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நிதிக்காக ஒரு மாணவன் வெளிநாட்டில் தவித்துக்கொண்டு அரசிடம் கெஞ்ச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை இடதுசாரிகளின் மாணவர் அமைப்பான ‘இந்திய மாணவர் சங்கம்’ (SFI) கடுமையாகக் கண்டித்துள்ளது. இதுகுறித்து SFI மாநில செயலாளர் சம்சீர் அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு நிர்வாகத்தின் தாமதம் ஒரு மாணவனின் எதிர்காரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். ‘பாரதிதாசன் மட்டுமின்றி, உதவித்தொகையை நம்பி வெளிநாட்டில் படிக்கும் அனைத்து மாணவர்களின் உரிமைகளையும் காக்கக் கோரி, அரசு உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும்; இல்லையெனில் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்’ என்று இடதுசாரிகள் எச்சரித்துள்ளனர்.”
“ஒன்று மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை, மற்றொன்று ஏழை மாணவனின் உயர்கல்வி நிதித் தடை! இந்த இரண்டு மிக முக்கியமான பிரச்சினைகளையும் கையில் எடுத்துள்ள இடதுசாரி கட்சிகள் மற்றும் SFI அமைப்பு, தற்போது விஜய்யின் அரசுக்கு எதிராகத் தீவிரம் காட்டி வருவது தவெக ஆட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தங்களை நம்பி ஆதரவு கொடுத்த கூட்டாளிகளே இன்று தங்களுக்கு எதிராகத் திரும்பியிருப்பது முதல்வர் விஜய்க்கு மிகப்பெரிய சோதனையாக மாறியுள்ளது. இந்த விவகாரங்களில் முதல்வர் விஜய் நேரடியாகத் தலையிட்டு என்ன மாதிரியான தீர்வை வழங்குவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..




