Udhayanidhi Stalin: ஆயி அம்மாளை நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி!

Advertisements

அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தைத் தானமாகக் கொடுத்த மதுரையை சேர்ந்த ஆயி அம்மாளை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

மதுரை மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆயி அம்மாளது,  கணவர் உக்கிரபாண்டியன் விபத்தில் உயிரிழந்ததால் வாரிசு அடிப்படையில் மதுரை தல்லாகுளம் கனரா வங்கியில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார்.

இவர்களது மகள் ஜனனி 2 ஆண்டுக்கு முன்பு காலமான நிலையில், மகள்  நினைவாக, பிறந்த ஊரான கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்துவதற்காகத் தனது பெயரில் இருந்த ரூ.7 கோடி மதிப்புள்ள 1.52 ஏக்கர் நிலத்தை அரசுக்குத் தானமாக வழங்கினார்.

இதையடுத்து கடந்த 5-ம் தேதி பள்ளியின் பெயரில் பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார். இவரின் ஈகைச் செயலை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததோடு, கவுரவிக்கும் வகையில் அவருக்குக் குடியரசு தின விருதும் அறிவித்தார்.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவைத் தொடங்கி வைத்தபின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம் அம்மாளின் இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்குத் திருவள்ளுவர் சிலை மற்றும் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். இந்தச் சந்திப்பின்போது, அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *