சசிகலா, தினகரனை அதிமுகவில் சேர்க்க வலியுறுத்தி எஸ்.பி.வேலுமணி பேட்டி!

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அஇஅதிமுகவில் உள்கட்சி மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) மீதான அதிருப்தியின் காரணமாக, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் சிலர் தனி அணியாகத் திரண்டனர்.

இந்த அணியின் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இணைந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிமுகவிற்குள் மோதல் முற்றவே, சி.வி.சண்முகம் உள்ளிட்ட பலரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சுமூகமாகத் திரும்பியதை அடுத்து அவர்களுக்கு மீண்டும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பழைய மாவட்டச் செயலாளர்கள் பதவி மட்டும் மீண்டும் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த எஸ்.பி.வேலுமணி தரப்பினர் அந்தப் புதிய பொறுப்புகளை ஏற்க மாட்டோம் என அறிவித்தனர். இதனிடையே, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரும் தவெகவில் இணைந்த நிலையில், இந்த உள்கட்சி பூசல் விவகாரம் சிறிது காலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எஸ்.பி.வேலுமணி, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தங்களுக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்புகளை ஏற்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் பேசுகையில், எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே கட்சிக்காக உழைத்தவர்கள் நாங்கள். அதுபோல இபிஎஸ் முதலமைச்சராகவும், பொதுச்செயலாளராகவும் ஆவதற்கும் சி.வி.சண்முகம் கடுமையாக உழைத்தார். தொடர்ந்து கட்சியில் இருந்து மூத்த நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருவது போன்ற நடவடிக்கைகள் தொடரக்கூடாது; கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும். சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும். எங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பழைய பொறுப்புகளை மீண்டும் வழங்கினால் மட்டுமே, எமக்கு அளிக்கப்பட்ட புதிய பொறுப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *