
குறிப்பாக, ATACMS ஏவுகணைகள் முழுமையாகத் தீர்ந்துவிட்டதாகவும், பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளில் 65 சதவீதமும், தாட் ஏவுகணைகளில் 38 சதவீதமும் பயன்படுத்தப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் டோமாஹாக் குரூஸ் ஏவுகணைகளின் இருப்பும் பாதியாகக் குறைந்துள்ளது.
இந்த ஆயுதத் தட்டுப்பாடு ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்ளும் அமெரிக்காவின் திறனைக் கட்டுப்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். அமெரிக்கா – ஈரானின் இந்த மோதலின் தாக்கம் அண்டை நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியா மீது தீவிரத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஹவுதிகள் ஏவிய ட்ரோன் தாக்குதலில் சவுதி அரேபியாவின் நஜ்ரான் விமான நிலையம் வெற்றிகரமாகத் தாக்கப்பட்டு, அதன் ரேடார் சேதமடைந்ததால் அனைத்துச் சேவைகளும் முடங்கியுள்ளன. 2022-ஆம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, சவுதி அரேபியாவும் ஹவுதிகளும் இவ்வளவு கடுமையான மோதல்களில் ஈடுபடுவது இதுவே முதல்முறையாகும்.
சர்வதேச வர்த்தகப் பாதையான செங்கடலில் பதற்றம் உச்சம் தொட்டுள்ள நிலையில், ஏமனின் ஹோடைடா துறைமுகத்திற்குத் தெற்கே, இந்தியக் கொடியுடன் சென்ற ‘MSV Faize நூர் ஒலியா” என்ற வணிகக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தக் கப்பலில் இருந்த 13 இந்தியர்கள் உள்பட 14 மாலுமிகளும் ஏமன் மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தலைகுப்புறக் கவிழ்ந்து மூழ்கிய இந்தக் கப்பல் விவகாரத்திற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதுடன், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகின் 12 சதவீத வர்த்தகம் நடைபெறும் செங்கடல் பகுதியில் இது போன்ற தாக்குதல்கள் தொடர்வது சர்வதேச எண்ணெய் விநியோகத்தைப் பேரளவில் பாதிக்கும்.
மத்திய கிழக்கு மோதல்களுடன் சேர்த்து உக்ரைன் – ஈரான் விவகாரமும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காஸ்பியன் கடலில் ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்ற ஈரானியக் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக, உக்ரைனில் மூன்று இடங்களைத் தாக்க ஈரான் திட்டமிட்டிருந்தது.
இருப்பினும், கடைசி நேரத்தில் உக்ரைன் மன்னிப்பு கோரியதால் அந்தத் தாக்குதல் கைவிடப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், கப்பல் அழிந்ததற்கும் உயிரிழப்புக்கும் உக்ரைன் அரசு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. இந்த நேரடி மோதல்கள் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுத்துவிடுமோ என்ற பதற்றம் உலக நாடுகளிடையே அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் , ஈரானுடனான அமெரிக்காவின் நீண்ட போர் ஏற்படுத்தியுள்ள கடுமையான ஆயுதத் தட்டுப்பாடு, சவுதி அரேபியாவின் நஜ்ரான் விமான நிலையம் மீது ஹவுதிகள் நடத்திய அதிரடித் தாக்குதல், செங்கடலில் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கிய இந்தியக் கப்பல் மற்றும் உக்ரைனிடம் ஈரான் கோரியுள்ள நஷ்டஈடு என அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.
குறுகிய காலத்தில் முடிவுக்கு வரும் என்று கணிக்கப்பட்ட இந்த மோதல்கள் தற்போது விஸ்வரூபம் எடுத்து, சர்வதேச நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்துள்ளன. ஒருபுறம் அமெரிக்கா தனது அதிதுல்லியமான நீண்ட தூர ஏவுகணைகளின் கையிருப்புகளை இழந்து தவிப்பதும், மறுபுறம் சவுதி அரேபியா மற்றும் செங்கடல் பகுதியில் வர்த்தகப் பாதைகள் முற்றிலுமாக முடங்குவதும் உலகப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
குறிப்பாக, இந்தியக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், அதில் மாலுமிகள் மீட்கப்பட்ட நிகழ்வும் சர்வதேசக் கடற்பரப்புகளின் பாதுகாப்பின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இதனுடன் உக்ரைன் – ஈரான் இடையேயான உரசல்களும் இணைந்துகொள்ள, இந்த மோதல்கள் எங்குபோய் முடியப் போகிறது என்ற பதற்றமும், மூன்றாம் உலகப் போரின் பயமும் உலக மக்கள் அனைவரின் நெஞ்சிலும் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஒட்டுமொத்த நெருக்கடியும் உலக நாடுகளுக்கு ஒரு பெரும் எச்சரிக்கையாகவே மாறியுள்ளது.



