
ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு 20 இலட்ச ரூபாய் வரை பிணையமில்லாக் கடன் வழங்க உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும், வேலைவாய்ப்புத் தாமதச்சூழலில் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் நாலாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள விடுதியில் தவெக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், இந்தச் சட்டமன்றத் தேர்தல் ஏழைகளுக்கும் ஏமாற்றுபவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் சுரண்டுபவர்களுக்கும் இடையிலான தேர்தல் எனக் கூறினார்.
மன்னராட்சியில் இருந்து தமிழ்நாட்டை மீட்டு மக்களாட்சி ஆக்குவதற்கு வாக்களியுங்கள் என்று மக்களைக் கேட்டுக்கொண்டார். தமது கட்சியின் தேர்தல் உறுதிமொழிகளாகப் போதை ஒழிப்பு, கல்வி உத்தரவாதம் ஆகியவற்றை அறிவித்தார். ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்க 20 இலட்ச ரூபாய் வரை பிணையம் இல்லாக் கல்விக் கடன் வழங்க உத்தரவாதம் அளிக்கப்படும் என்று கூறினார். அரசுப் பணியாளர், சீருடைப் பணியாளர், ஆசிரியர் தேர்வு வாரியங்களை ஒருங்கிணைத்து ஆட்சேர்ப்புக் கால அட்டவணை வெளியிடப்படும் என்று கூறினார்.
வேலைவாய்ப்புத் தாமதச்சூழலில் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 4000 ரூபாயும், பட்டயப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு 2500 ரூபாயும் நலநிதியாக வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
இயற்கை வளக் காவல், மரம் வளர்ப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு மாதம் 18 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் வரலாறு பண்பாடு ஆகியவற்றை உலக அரங்கில் பரப்புவதற்குப் படைப்பாளித் தொழில்முனைவோர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், ஒன்றரை இலட்சம் படைப்பாளிகளுக்குத் தொடக்க மூலதனம் அளிக்கப்படும் என்றும், இதற்காக 500 படைப்பாளிப் பள்ளிகள் 500 உருவாக்கப்படும் என்றும் கூறினார்.
உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் ஒருநாளும் மக்களை ஏமாற்ற மாட்டேன் என்று உறுதியளித்தார் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றி, மக்களை நேசிக்கிற தமிழக வெற்றிக்கழகத்தை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


