தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.க, பெரும்பான்மை எட்டாத நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோர விஜய்க்கு கவர்னர் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் 118 என்ற பெரும்பான்மை தொகுதிகள் கிடைக்கவில்லை.
பெரும்பான்மை என்பது, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாதியான 117 தொகுதிகளை விட ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும். அதாவது, 118 தொகுதிகள் வேண்டும்.
எனவே தங்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் கேட்டு, கவர்னருக்கு விஜய் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.வி.அர்லேகர் இன்று சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக இடங்களை வென்ற கட்சி என்ற முறையில் விஜய்க்கு கவர்னர் அழைப்பு விடுத்து, புதிய அமைச்சரவை பதவி ஏற்புக்கான அனுமதியை வழங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


