மேகமலை, வருசநாடு வனக் கிராம மக்களை வெளியேற்றும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தேனி மாவட்டம் தும்மக்குண்டு, மேகமலை உள்ளிட்ட 98 மலைக் கிராமங்களில் பல தலைமுறையாக வசித்து வருபவர்களை வெளியேற்ற முயல்வது மிகுந்த வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பன்மடங்கு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டுள்ள நவீன உலகத்தைப் புறக்கணித்துவிட்டு, இன்றளவும் இயற்கையோடு இயற்கையாக வாழ்கின்ற அப்பெருங்குடி மக்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மலைக்காடுகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற உண்மையான அக்கறை இருக்குமாயின், காடுகளில் முறைகேடாக மரங்கள் வெட்டப்பட்டு டன் கணக்கில் கடத்தப்படுவதை,
தடுத்து நிறுத்தத் தீவிர நடவடிக்கை எடுப்பதே சரியானதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி, வனக் கிராம மக்களுக்கு உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்குவதோடு, மலைக் கிராமங்களை விட்டு மக்களை வெளியேற்றும் முடிவைக் கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

