ஈரோட்டில் த.வெ.க. பொதுக்கூட்டம்..!

Advertisements

தமிழக சட்டசபை தேர்தல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி அமைப்பது, பிரசார யுக்திகளை வகுப்பது உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில், ஆளும் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிட உள்ளன.

இதேபோன்று, நாம் தமிழர், த.வெ.க. ஆகிய இரு கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இதில், தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் சம்பவத்துக்கு பிறகு கடந்த மாதம் காஞ்சீபுரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு பேசினார். அதற்கு அடுத்தபடியாக புதுச்சேரியில் கடந்த 9-ந்தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் பேசினார். இந்த நிலையில் கரூர் சம்பவத்துக்கு பின்னர், தமிழ்நாட்டில் விஜய் கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டமாக ஈரோடு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது. மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார். முன்னதாக சென்னையில் இருந்து விமானத்தில் கோவை விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து கார் மூலம் நேராக விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வருகிறார்.

அங்கு பிரத்தியேக பிரசார வாகனத்தில் நின்று கொண்டு பொதுமக்களை சந்தித்து அவர்கள் மத்தியில் பேசுகிறார். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

விஜய் வருகையை முன்னிட்டு நேற்று இரவில் இருந்தே பொதுக்கூட்ட மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நேற்று 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மைதானத்தை சுற்றிலும் தொட்டிகள் வைக்கப்பட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *