
தமிழ்நாடு பள்ளிகளில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் முமொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி வழங்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்ததன் பின்னர் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மீண்டும் இந்தி திணிப்பு மேற்கொள்ளப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தச் சூழலில், தமிழக அரசுக்குத் தர்மேந்திர பிரதான் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், மாநில அரசு அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாணவர்களுக்கு அறிவு, திறன்கள் மற்றும் எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை வழங்கும் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2022 இல் சென்னைக்கு வந்த பிரதமர், “தமிழ் மொழி நித்தியமானது, தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்துவதில் அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்தக் கொள்கை ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் தாய்மொழியில் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்கிறது. NEP 2020 மொழியியல் சுதந்திரத்தின் கொள்கையை நிலைநிறுத்துகிறது. மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மொழிகளைக் கற்கும் உரிமையைப் பெறுகிறார்கள்.
இந்தியாவின் கல்வித் துறையின் அடிப்படையாக இருக்கும் மும்மொழிக் கொள்கையை ஒரு முக்கிய கட்டத்திற்கு கொண்டு வருகிறோம். கல்விக் கொள்கைகளின் ஒரு பகுதியாக இருந்தாலும், இதுவரை அது எழுத்து மற்றும் உணர்வுடன் செயல்படுத்தப்படவில்லை. இதனால், பள்ளிகளில் இந்திய மொழிகளை முறையாகக் கற்பிப்பதில் குறைவாகவே செயல்பட்டது.
காலப்போக்கில், இது வெளிநாட்டு மொழிகளை அதிகமாக நம்புவதற்கான வழியை உருவாக்கியது. தமிழ் உட்பட ஒவ்வொரு இந்திய மொழியும் கல்வியில் அதன் உரிய இடத்தைப் பெறுவதற்காக NEP 2020 முயற்சிக்கிறது.
